Published : 19 May 2023 06:10 AM
Last Updated : 19 May 2023 06:10 AM

175 ஆண்டுகளை கடந்த உதகை தாவரவியல் பூங்கா: மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரம்

உதகை: உதகை தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மலர் கண்காட்சியில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா கடந்த 175 ஆண்டுகளாக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா, தாவரவியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரியாகும். கடந்த 1847-ம் ஆண்டில்55 ஏக்கர் பரப்பில் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட உதகை தாவரவியல் பூங்காவில், முதன்முதலில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டன. காலப்போக்கில் உலகில் உள்ள அரியவகை மரங்கள், தாவரங்கள், மலர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷமாக இப்பூங்கா மாற்றப்பட்டது.

இப்பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இவை தவிர 127 வகை பெரணிகள் (பூக்காத தாவரம்), ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் வகைகளும் உள்ளன. ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சியின் போது 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்லாயிரம் வண்ண மலர்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுவது சிறப்புக்கு உரியதாக உள்ளது.

இந்த பூங்காவை உருவாக்கியவர் வில்லியம் கிரஹாம் மெக் ஐவர். லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவில் பயிற்சி பெற்ற மெக் ஐவருக்கு உதகையில் தாவரவியல் பூங்கா உருவாக்கும் பணி வழங்கப்பட்டது. முதலில் பழத் தோட்டமாக உருவாக்கிய பின்னர் இலங்கை, கொல்கொத்தா, மொரிசியஸ், ஹாங்காங், மெல்பர்ன் பகுதிகளிலிருந்த பழங்கள் மற்றும் மலர்களை இறக்குமதி செய்து இந்த பூங்காவில் நடவு செய்தார்.

அதில் மிகவும் அரியவகை மரமாக இருப்பது ‘ஜிங்கோ பைலோபா’ எனும் டைனோசர் காலத்து மரம். 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் இது என தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பூங்கா உருவாக்கி இந்தாண்டு 175-வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதை நினைவுகூறும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் இந்தாண்டு மலர் கண்காட்சியில் 175-வது ஆண்டு பூங்கா என்ற சிறப்பு மலர் அலங்காரம் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x