உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்

உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்
Updated on
2 min read

சர்வதேச பிரசித்தி பெற்று சுற்றுலா தலமான உதகைக்கு ஆண்டுதோறும் 35 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோடை காலம் மற்றும் இரண்டாம் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிகின்றனர்.

இந்தாண்டு சுற்றுலா பயணிகளை வரவேற்க அனைத்து சுற்றுலா தலங்களும் தயாராக உள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கோடை விழா விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கோடை விழா கடந்த 6-ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக பல்வேறு காட்சித் திடல்களை இக்காட்சியில் அமைத்து அனைத்து விதமான காய்கறிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் சுமார்‌ ஒன்றரை டன் அளவில்‌ உருளைக்கிழங்கினால்‌ ஆன கம்பு செடி, குடை மிளகாய், பஜ்ஜி மிளகாயினால்‌ ஆன மக்காச்சோளம்‌ மெகா உருவங்களாக அமைக்கப்பட்டிருந்தன.

இந்தாண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறு தானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. யானை குடும்பம்‌, டிராகன்‌ மற்றும்‌ முதலை போன்ற உருவங்கள்‌ வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், காய்கறிகளை கொண்டு மீன், கிட்டார், கடிகாரம், உதகையின் 200-வது ஆண்டினை போற்றும் நோக்கில் ஊட்டி 200 என்ற சிறப்பு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இரு நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சியை 17 ஆயிரத்து 592 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா காட்சியும் நடந்தது. உதகை ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 35,000 வண்ண ரோஜாக்களைக் கொண்டு 29 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது காட்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

மேலும், குழந்தைகளை கவரும் விதமாக விளையாட்டை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ மட்டைப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, உதை பந்து போன்ற விளையாட்டுகளின்‌ மாதிரி வடிவமும், ‌ குழந்தைகளை கவரும்‌ விதமாக யானை, முயல்‌ போன்ற வடிவங்களும், தமிழ்நாடு அரசின்‌ திட்டமான மீண்டும்‌ மஞ்சப்பை திட்டத்தை அனைவரும்‌ கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை, உலக சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும்‌ விதமாக சின்னம்‌, அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும்‌ விதமாக கோ ஆர்கானிக், உதகையின்‌ 200-வது அகவையை கொண்டாடும்‌ விதமாக உதகை 200 சின்னம்‌ போன்ற வடிவங்களும்‌ சுமார் 50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப் பட்டிருந்தன.

விழாவின் முக்கிய அங்கமான மலர் கண்காட்சி இன்று (மே 19) உதகை தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

உதகை மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது என்பதால் மலர் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலர்கண்காட்சி கண்டு ரசித்து செல்வார்கள். இந்தாண்டு 125-வது மலர் கண்காட்சி நடக்கிறது.

சுற்றுலா பயணிகளை கவர ‌ஜெரேனியம்‌, பால்சம்‌, லிசியான்தஸ்‌, சால்வியா, டெய்ஸி, சைக்லமனீ, புதிய ரக ஆர்னமென்டல்கேல்‌, ஓரியணீடல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள்‌, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட்‌, பிரன்ச்‌ மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ்‌, ஜினியா, ஸ்டாக்‌,வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆனீடிரைனம்‌, ட்யூப்ரஸ்‌ பிகோனியா, கிரைசாந்திமம்‌ஹெலிகோனியா, ஆர்கிட்‌, ஆந்தாரியம் ‌போன்ற 325 வகையான ரகங்கள்‌ சுற்றுலா பயணிகளின்‌ பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலர் காட்சியையொட்டி மலர்க் காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35,000 வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தன. அவை தற்போது பூத்துக் குலுக்கின்றன. இந்த தொட்டிகள் காட்சி மாடத்தில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

காட்சியின் சிறப்பு அலங்காரமாக தேசிய பறவையான மயில், பூங்கா நிறுவப்பட்ட 175-வது ஆண்டை குறிக்கும் வகையிலும், 125-வது மலர் கண்காட்சியை குறிக்கும் வகையிலும் சிறப்பு அலங்காரங்கள்.

விலங்குகள் மற்றும் பறவையினங்களின் உருவங்கள் மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்லாயிர லில்லியம்ஸ் மலர்கள் மற்றும் கொய்மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.வரும் 23-ம் தேதி நடக்கும் மலர் கண்காட்சி பரிசளிப்பு விழா நடக்கிறது.

இதையடுத்து வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்காட்சி நடக்கிறது. இதற்காக சால்வியா, டேலியா, பால்சம், மேரி கோல்டு, ஆஸ்ட்டர், செல்லோஷியா உட்பட 120-க்கும் மேற்பட்ட ரக செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.

பூங்கா முழுவதும் சுமார் 3 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கோடை விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் முனைந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in