கொடைக்கானலில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா பூக்கள்!

கொடைக்கானலில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா பூக்கள்!
Updated on
2 min read

திண்டுக்கல்: கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக ரோஸ் கார்டன் உள்ளது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறையினர் மூலம் பராமரிக்கப்படும் இந்த கார்டனில் பல்வேறு வகையான ரோஜாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 10 ஏக்கரில் 1,500 வகையான16,000 செடிகள் இந்த ரோஸ் கார்டனில் உள்ளது. இந்த செடிகளை பராமரிப்பதற்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோடை சீசனை முன்னிட்டு மே மாதங்களில் ரோஸ் கார்டனில் பல்வேறு வகையான ரோஜாப் பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரோஜா செடிகளில் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பழுப்பு நிறம் என பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்களை பார்த்து ரசித்தும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர செயற்கை நீர் வீழ்ச்சி, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள் பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ''கோடை சீசனை முன்னிட்டு தற்போது ரோஜா செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. மலர் கண்காட்சியின் போது அனைத்து செடிகளிலும் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in