

கிருஷ்ணகிரி: தொல்லியல் எச்சங்களைப் பாதுகாக்கவே ‘காணத்தக்க கிருஷ்ணகிரி’ சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
'காணத்தக்க கிருஷ்ணகிரி' விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேற்று தொடங்கி வைத்து, மல்ல சந்திரத்தில் உள்ள கல்திட்டைகளைச் சுற்றுலா குழுவினருடன் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: தொல்லியல் எச்சங்கள் அதிகளவில் உள்ள மாவட்டங் களில் முதன்மையானது கிருஷ்ணகிரி மாவட்டமாகும். இவற்றை அறிந்து கொள்ளவும், பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கற்காலம் தொடங்கி தற்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கிருஷ்ணகிரி மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதி மக்கள் இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்பதை பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொகரப்பள்ளி அருகே மயிலாடும்பாறையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இரும்புக் காலத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவது இறந்தோரின் நினைவாக எழுப்பியுள்ள பெருங்கற்படைச் சின்னங்களாகும்.
இச்சின்னங்களில் முதன்மையானது கல்திட்டை களாகும். 100-க்கும் மேற்பட்ட கல்திட்டைகளைக் கொண்ட இடம் தான் மல்லசந்திரம் மோரல் பாறையாகும். தமிழகத் தில் ஒரே இடத்தில் அதிக கல்திட்டைகள் உள்ள இடம் என்ற பெருமைக்குரியது. இவற்றை பாதுகாக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ‘காணத்தக்க கிருஷ்ணகிரி' சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 6-ம் தேதி தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், மாநகராட்சி ஆணையர் சினேகா, ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயினி, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.