

ஸ்ரீவில்லிபுத்தூர் | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் வரலாறு மற்றும் சிறப்புகளை எடுத்து கூறும் வகையில் சுற்றுலா வழிகாட்டி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் சுற்றுலா வழிகாட்டி நியமனம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் கோயில் சிறப்பு, கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கோயில் சார்ந்த வரலாற்றை மக்களுக்கு பரப்புவதற்காக வழிகாட்டி ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதற்கட்டமாக, தற்போது ஆண்டாள் கோயிலுக்கு சுற்றுலா வழிகாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அன்பரசு கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு கோயில் தல வரலாறு, கட்டிடக் கலை, சிற்பங்கள், தனித்துவம் குறித்து சுமார் 2 மணி நேரம் விளக்கம் அளிக்கப்படும்.
இதற்காக ஒருவருக்கு ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த தொகையில் சுற்றுலா துறைக்கு ஒரு பங்கு, அறநிலைய த் துறைக்கு ஒரு பங்கு, வழிகாட்டிக்கு ஒரு பங்கு எனப் பிரித்து வழங்கப்படும்.
சுற்றுலா வழிகாட்டிகளாக படித்த இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் புதிய தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவதுடன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
இந்த வழிகாட்டிகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டை மூலம் இந்தியா முழுவதும் உள்ள தொல்லியல் இடங்கள் மற்றும் கோயில்களில் அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றலாம், என்றார். விழாவில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, வட்டாட்சியர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.