சுற்றுலாப் பயணிகளை கவர கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதக்கும் பாலம்

சுற்றுலாப் பயணிகளை கவர கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதக்கும் பாலம்
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக நட்சத்திர ஏரிப்பகுதியில் 160 அடி தூரத்திற்கு மிதவை பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள 59 ஏக்கர் பரப்பளவிலான நட்சத்திர வடிவிலான ஏரியில் சுற்றுலாத்துறை, நகராட்சி மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்யவும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்யவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏரியை அழகுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.24 கோடியில் ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியில் உள்ள செடிகளை அகற்றுவதற்கு பிரத்யேக இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது. ஏரியை சுற்றி சைக்கிளிங் செல்வதற்கு என்று தானியாக சைக்கிளிங் டிராக் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஏரி மேலே நடந்து சென்று படகு சவாரி செய்யவும், சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவும் 160 அடி தூரத்திற்கு மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஏரியில் சில மீட்டர் தொலைவுக்கு மிதக்கும் பாலத்தில் நடந்து சென்று சுற்றுலாப் பயணிகள் படகில் ஏறலாம். இதற்கு முன் மரத்தினால் ஆன பாலம் இருந்தது. நீண்ட நாட்களாக தண்ணீரிலேயே இருப்பதால் மரப்பாலம் அடிக்கடி சேதம் அடைகிறது.

இதை தவிர்க்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவும் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.இது டன் கணக்கிலான எடையை தாங்கும். முற்றிலும் பாதுகாப்பானது. மேலும், பயணிகள் வசதிக்காக புதிதாக 75 படகுகள் வாங்கப்பட உள்ளதாக கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in