

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரவில் கடும் குளிர் நிலவுவதால் அதிகாலையில் பனி படர்ந்து வெண்மை நிறமாக காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது.
கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக் காலமாக இருக்கும். இந்த ஆண்டு முன் கூட்டியே நவம்பர் மாதத்திலேயே உறை பனி காலம் தொடங்கியது. டிசம்பர் தொடக்கத்தில் மழை பெய்ததால் உறை பனி குறைந்து, அடர் பனி மூட்டம் மட்டும் நிலவியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இரவில் குறைந்தபட்சமாக 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. அதிகாலையில் உறை பனி படர்ந்து பசுமையான புல்வெளிகளில் வெண் பட்டு போர்த்தி காஷ்மீர் போல காட்சி அளிக்கிறது.
கொடைக்கானல் மேல்மலை, ஏரிச்சாலை, பாம்பார் புரம், பிரையண்ட் பூங்கா மற்றும் ஜிம்கானா உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை உறை பனி காணப்பட்டது. திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி படர்ந்து மூடி இருந்தது. ஏரியின் மேல்பகுதி தண்ணீரில் படர்ந்திருந்த பனிப்படலம் வெயில் பட்டவுடன் ஆவியாக மாறி வெளியேறுகிறது.
இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தாலும், இரவில் நிலவும் கடும் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் ஓரிரு நாளிலேயே திரும்பி விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டினர் இந்த காலநிலையை வெகுவாக அனுபவிக்கின்றனர். உறை பனியால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.