

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: ஆர்.டி.சிவசங்கர்
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 4 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை தொடர்ந்து, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் சீசனின்போது மலர் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறாவிட்டாலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதன்படி, இரண்டாம் சீசனுக்கான நாற்று நடவுப் பணிகள் தொடங்கி உள்ளன.
பூங்கா முழுவதும் உள்ள பாத்திகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக இத்தாலியன் பூங்காவில் மேரிகோல்டு, டேலியா, டெய்சி, கேலண்டுள்ளா உள்பட பல்வேறு வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்கா நுழைவு வாயில், ஜப்பான் பூங்கா போன்ற பகுதிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் பூங்காவில் அலங்கார செடிகள் கொண்டு ‘ஐ லவ் ஊட்டி’ போன்ற அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துவிடும்.இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என பூங்கா நிர்வாகிகள் கூறினர்.
இதேபோல, குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சால்வியா, டேலியா, மேரிகோல்டு, லில்லியம், பெகோனியா உள்பட 25 ரகங்களில் சுமார் 2.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவுப் பணி நடைபெற்று வருகின்றன.