காணும் பொங்கல்: புதுச்சேரி கடற்கரைகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகை 14-ம் தேதியும், நேற்று மாட்டு பொங்கலும் கொண்டாடப்பட்டது. மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சிறுவர்கள் பெரியவர்களை வணங்கி ஆசி பெற்று, பொங்கல் காசு பெற்றனர்.மேலும் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

காணும் பொங்கலையொட்டி இன்று புதுச்சேரியின் சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோயில், பாண்டி மெரினா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.மேலும், சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகுதியாக இருந்தது.

இதே போல் ஊசுட்டேரி படகு குழாம், சின்ன வீராம்பட்டினம் சின்வீர் பீச், மணப்பட்டு பல்மைரா கடற்கரை, காலாப்பட்டு கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் சுற்று வட்டார பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்து மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர். கடலில் இறங்க தடை: புதுச்சேரியில் உள்ள கடற்கரைகளுக்கு வந்தவர்கள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

மீறி கடலில் இறங்கியவர்களை போலீஸார் எச்சரித்து வெளியேற்றினர்.மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் மண்ணறிப்பு ஏற்பட்டு, கடற்கரை மணல்பரப்பு சுருங்கி காணப்பட்டதால் அங்கு வருகை புரிந்தோர் பலரும் கடலில் இறங்கி கால்களை நனைக்க சிரமப்படும் நிலை ஏற்பட்டது.சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in