உதகை சுற்றுலா தளங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்: சுற்றுலா பயணிகள் குழப்பம்

உதகை சுற்றுலா தளங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்: சுற்றுலா பயணிகள் குழப்பம்
Updated on
1 min read

உதகை: உதகை சுற்றுலா தளங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற திடீர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற உதகைக்கு ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடகா, கேரளாவிலிருந்து ஏராளமான பயணிகள் இங்கு வந்து இதமான காலநிலையை அனுபவிப்பர். இந்நிலையில் எச்எம்பி வைரஸ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பரவி வருவதால், அங்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அரசு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உதகை வரும் சுற்றுலா பயணிகள் தங்களை பாதுகாக்கவும், உள்ளூர் மக்களை வைரஸிலிருந்து பாதுகாக்கவும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இப்போதே சுற்றுலா பயணிகள் உதகையில் குவியத்தொடங்கியுள்ளனர். உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்ட சிகரம் ஆகிய இடங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொங்கல் அன்று இன்னும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதை கருத்தில் கொண்டு உதகை தாவரவியல் பூங்கா நுழைவுவாயிலில் ‘சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று அறிவிப்புகள் பூங்கா நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பூங்காவுக்கு வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாமல் பூங்காவை கண்டுகளித்தனர். பூங்கா நிர்வாகம் இன்று திடீரென முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பை ஒட்டியுள்ளதால் சுற்றுலாபயணிகளுக்கு இது குறித்து தெரியவில்லை. அறிவிப்பு பலகையை பார்த்து சில சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து பூங்காவுக்குள் சென்றனர். மேலும், பூங்கா ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை மாஸ்க் அணிய வலியுறுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணிவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக் கலைத்துறையின் அறிவிப்பால் சுற்றலா பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in