Published : 11 Jan 2025 06:52 PM
Last Updated : 11 Jan 2025 06:52 PM

பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் காத்திருந்த பயணிகள் | படம்: பி.வேளாங்கண்ணி ராஜ்

சென்னை: பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாட சொந்த ஊருக்கு பயணிக்கும் வகையில் 44,580 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் இந்த பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஜன.10 முதல் 13-ம் தேதி வரை சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகின்றன. நான்கு நாட்களும் சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல பிற ஊர்களிலிருந்து ஜன.10 முதல் 13-ம் தேதி வரை 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட முடிவு செய்து இயக்கபட்டுவருகின்றன.

பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜன.15 முதல் 19-ம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் வசதிக்காக சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கோயம்பேடு பேருந்து நிலையம்த்தில் இருந்து கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு சென்னை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்காக ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பயணிகள் சிரமமின்றி முன் பதிவு செய்யும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x