இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாஸ்கோவின் புதிய திட்டம் அறிமுகம்

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாஸ்கோவின் புதிய திட்டம் அறிமுகம்
Updated on
2 min read

சென்னை: இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு (Moscow City Tourism Committee), இந்தியாவில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யும் வணிக ரீதியிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் புதிய பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாஸ்கோவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மைஸ் (MICE - Meetings, Incentives, Conferences, and Exhibitions) என்னும் கூட்டங்கள், ஊக்கத் தொகைகள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகிய கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான முதன்மை சுற்றுலா நகரமாக ரஷ்யத் தலைநகரை முன்னிறுத்தவும் மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்கள் (Moscow MICE Ambassadors) என்னும் புதிய சான்றிதழ் படிப்பினை இணையவழியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலாத் துறையில் ஆர்வம் உள்ளோர் மற்றும் பணியாற்றுவோர் இதனைக் கற்கலாம். ஜூன் 3 முதல் நவம்பர் 1, 2024 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த இணையவழி சான்றிதழ் படிப்புத் திட்டம், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக இருக்கும். இந்தியாவின் ‘மைஸ்’ தொழில் பிரிவு சார்ந்த பிரதிநிதிகள் RUSSPASS தளம் மூலம் திட்டத்துக்கு பதிவு செய்துகொள்ளலாம்.

இந்திய ‘மைஸ்’ முகவர்கள் சங்கத்துடன் (NIMA - Network of Indian MICE Agents) இணைந்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்கள் பைலட் பாட முறையில் 50 உறுப்பினர்கள் தொடக்கச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். இந்த வெற்றியை மேம்படுத்தும் வகையில், இந்த ஆண்டு இந்தியாவின் ‘மைஸ்’ தொழில் பிரிவைச் சேர்ந்த 200 நிபுணர்களுக்கு சான்றிதழை வழங்கத் தயாராக உள்ளது.

இது குறித்து மாஸ்கோ நகர சுற்றுலாத் துறையின் தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறுகையில், “மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்கள் திட்டம் இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் அது எங்கள் முன்னுரிமையான பகுதி. இந்தியாவில் இருந்து மாஸ்கோவுக்கு வணிகப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதைத் தாண்டி எங்கள் நோக்கம் பெரிது. நாங்கள் வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதையும், எங்கள் திறன்களை திறம்பட்ட வகையில் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதை அடைவதற்கு, மாஸ்கோவில் கார்ப்பரேட் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது சார்ந்த நுணுக்கங்களை இந்திய ‘மைஸ்’ நிபுணர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும், இந்திய சந்தைக்கு ஏற்றவாறு வணிக நிகழ்ச்சி நிரல்களைத் தனித்துவத்துடன் நடத்துவதற்கான ஆதரவையும் வழங்குகிறோம்.

எங்கள் பயிற்சித் திட்டங்கள் நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சான்றிதழ்களைப் பெறும் அனைத்து ‘மைஸ்’ நிபுணர்களும், வரும் ஆண்டுகளில் சான்றிதழ்களைப் பெறுபவர்களும், பெரும் தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வணிகத் திட்டங்களை மாஸ்கோவில் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

மாஸ்கோவில் நிகழ்வுகளைத் திட்டமிடுதல் மற்றும் ஏற்பாடு செய்தல் சார்ந்த நடைமுறைத் தகவல்களைச் சேர்க்கும் வகையில், இந்திய கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உதவிக் குறிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவின் முக்கிய வணிக மாவட்டங்கள், மாநாடு நடத்துவதற்கான வசதிகள், தங்குமிட விருப்பங்கள், போக்குவரத்து சேவைகள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் பற்றி பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்கள் மாஸ்கோ நகர சுற்றுலாக் குழுவின் சிறந்த திட்டங்களைப் பற்றிய நேரடி அறிவைப் பெறுவார்கள். மாஸ்கோவை பிரபலப்படுத்துவதற்கும், ‘மைஸ்’ நிகழ்வுகளுக்கான ஏல (bidding) நடைமுறை சார்ந்து உதவுவதற்கும் உதவிக் குறிப்புகளைப் பெறுவார்கள்.

மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்களுக்கான சான்றிதழ் திட்டமானது, நகரின் ‘மைஸ்’ திறனைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஐந்து ஆழமான பாடங்களைக் கொண்டுள்ளது. அதன் தனித்துவமான கலாச்சார அழகு, பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு மற்றும் வளமான கட்டிடக்கலை பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு தொகுதியும் ஒரு வீடியோ விரிவுரை மற்றும் சுய ஆய்வுக்கான தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இவை பங்கேற்பாளர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு மதிப்புமிக்க கருவிகளை வழங்குகின்றன. அனைத்துப் பாடங்கள் மற்றும் மதிப்பீடுகளை வெற்றிகரமாக முடித்தவுடன், மாஸ்கோ ‘மைஸ்’ தூதர் சான்றிதழை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள்.

மாஸ்கோவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படையில் பார்த்தால், தொடர்ந்து முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்துவருகிறது, அதில் இந்தியப் பயணிகளுக்கு முக்கிய உந்துதலாக இருப்பது வணிகப் பயணம். 2023-ம் ஆண்டில், மாஸ்கோ 3.7 மில்லியன் வணிகப் பயணிகளை வரவேற்றது. இது முந்தைய ஆண்டை விட 7% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் மாஸ்கோவில் உள்ள மைஸ் தொழில்துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஏப்ரல் 2024ல் ஒன்றிணைத்து, ஷேப்பிங் பியூச்சர் ‘மைஸ்’ மாநாட்டை மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் குழு விவாதங்கள் மற்றும் கருப்பொருள் அமர்வுகள் மூலம் மாஸ்கோவில் வணிக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் நன்மைகள், பயனுள்ள ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இந்திய மைஸ் பங்குதாரர்களுக்கு மேம்பட்ட அறிவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in