

கொடைக்கானல்: கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நாளை (மே 17) காலை தொடங்குகிறது. இந்நிலையில், பிரையண்ட் பூங்கா நுழைவு கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நாளை (மே 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாளை தொடங்கி மே 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளூர் கலைஞர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார அணி வகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
இந்நிலையில், பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நடவு செய்யப்பட்டுள்ள சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியா உட்பட 15 வகையான 2.50 லட்சம் மலர்ச் செடிகள் தற்போது பல வண்ணங்களில் பூத்துக் குலங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் கண்காட்சிக்கான நுழைவு கட்டணத்தை 10 நாட்களுக்கு மட்டும் பெரியர்வர்களுக்கு ரூ.75, சிறியவர்களுக்கு (வயது 3 -10) ரூ.35 என இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விழாவையொட்டி, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.