சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நீலகிரியில் முதன்முறையாக ‘கியூஆர் கோடு’ அறிமுகம்

உதகையில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து அறிய ‘கியூஆர் கோடு’ வரை படத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கிய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தர வடிவேல். படம்: ஆர்.டி.சிவசங்கர
உதகையில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து அறிய ‘கியூஆர் கோடு’ வரை படத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கிய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தர வடிவேல். படம்: ஆர்.டி.சிவசங்கர
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், காவல் துறை சார்பில் ‘கியூஆர் கோடு’ வரைபடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உதகையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், ஒரு வழிப்பாதை அமைத்தல் உட்பட பல்வேறு மாற்று ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர். இந்நிலையில், போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலையில் இருந்து அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகளுக்கு ‘கியூஆர் கோடு’ வழிகாட்டி வரைபடம் வழங்கும் திட்டத்தை காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தர வடிவேல் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது சுற்றுலா பயணிகளிடையே அவர் பேசியதாவது: ‘கியூஆர் கோடு’ வரைபடத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களின் வரைபடம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக ‘கியூஆர் கோடு’ ஸ்கேனருடன் வரைபடம் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் லவ்டேல் பகுதியில் இருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் 3 வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் வரைபடங்கள் அச்சிடப்பட்டு, மலர்க் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். கோவை சரக டிஐஜி உத்தரவின் பேரில், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உதகைக்கு கூடுதலாக போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளனர்.

மொத்தம் 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதகை நகர் மற்றும் சோதனைச் சாவடிகளில் சுமார் 1,300 கேமராக்கள் பொருத்தப் பட்டு, கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய சுற்றுலா தலங்கள் அருகே காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி, உதவி ஆய்வாளர்கள் வின்சென்ட், அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in