

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக எங்கும் ஏறி இறங்கும் (hop on and hop off) ஐந்து சுற்றுலா மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். புதுச்சேரி முதல் ஆரோவில் வரை 21 இடங்களைப் பார்க்கலாம்.
புதுச்சேரி ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மினி பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு தற்போது ஐந்து பஸ்கள் சுற்றுலா பஸ்களாக நடைமுறைக்கு வந்துள்ளன. எங்கும் ஏறி இறங்கும் வசதி உண்டு. புதுச்சேரி அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இணைக்க குறைந்தப்பட்ச கட்டணமாக நபருக்கு நாள் ஒன்றுக்கு (12 மணி நேரம்) ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு சுற்றுலா இடத்தில் இருந்து அடுத்த இடம் செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து சுற்றுலா தலங்களில் இயங்கும். இதில் மொத்தம் 21 இடங்களை பார்க்கலாம்.
காலை முதல் புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ், தாவரவியல் பூங்கா, சேக்ரட் ஹார்ட் பசிலிக்கா, பாண்டி மெரினா, ஆயி மண்டபம், அரவிந்தர் ஆசிரமம், அரவிந்தர் கையால் காகிதம் தயாரிக்கும் ஆலை, கைவினை கிராமம், அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம், சுண்ணாம்பாறு போட் ஹவுஸ், சிங்கிரி நரசிம்மர் கோயில், திருக்காஞ்சி, வில்லியனூர் தேவாலயம், வில்லியனூர் திருக்காமீசுவரர் கோயில், ஊசுடு ஏரி, பாண்லே தலைமையகம், ஆரோவில் மாத்ரிமந்திர், ஆரோவில் பீச், காமராஜர் மணி மண்டபம், அப்துல் கலாம் அறிவியல் மையம் சென்று புதிய பஸ்நிலையத்தை வந்தடையும்.
இப்பஸ்களை துவக்கி வைத்தபிறகு துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "ஆலோசனை செய்ததுபோல் சுற்றுலா பேருந்துகள் வந்துள்ளன. லண்டன் பஸ்களை போல் சுற்றுலா பஸ்களில் பஸ்சின் மேல் தளத்தில் இருக்கை போட்டு அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்க விரும்பினோம். புதிய பஸ்கள் வரும்போது அதுபோல் செய்யவுள்ளோம்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும்போது பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா பஸ்களுக்கு அதிக தேவை ஏற்படும். இது ஆரோவில் வரை செல்லும். சுற்றுலா பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். சுற்றுலா பஸ்கள் பெரியவர்கள், குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பஸ்களுக்கு முதல்வர் ரங்கசாமி பூஜை செய்தார். அதையடுத்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.