

உதகை: தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களால், உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாகவே அதிகரிக்க தொடங்கிவிட்டது. உதகையிலுள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, உதகையில் பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது.
இருப்பினும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க, அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர். இதனால், கடைகளிலும் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சாக்லெட் கடைகளில் இனிப்பு பண்டங்களின் விற்பனை களைகட்டி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் உதகைக்கு வந்து செல்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்ட எல்லையின் நுழைவுப் பகுதியான கக்கநல்லா சோதனைச்சாவடியில் இருந்து உதகை வரை தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி, போக்குவரத்தை போலீஸார் சீரமைத்து வருகின்றனர்.