

பழநி: தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழநி நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள தொட்டிமடை நீர்வீழ்ச்சியில் 6 மாதங்களுக்கு பிறகு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலமடைந்து வருகின்றனர்.
பழநியை அடுத்துள்ள பெருமாள்புதூர் சண்முகம் பாறை அருகே அமைந்துள்ளது தொட்டிமடை நீர் வீழ்ச்சி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. சண்முகம் பாறையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதிக்குள் கரடு முரடான பாதைகளில் நடந்து சென்றால் நீர்வீழ்ச்சியை அடையலாம்.
தண்ணீர் மூலிகை செடிகளின் மீது பட்டு வருவதால் குளிப்போருக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிமானோர் நீர்வீழ்ச்சிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 6 மாதங்களாக போதிய மழையின்மையால் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்து, வெறும் பாறை மட்டுமே தெரிந்தது.
அதனால் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போடலாம் என்று எதிர்பார்த்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பழநியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள அணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள தொட்டிமடை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதமான தென்றல் காற்றுடன், அவ்வப்போது சாரல் மழையும் பெய்வதால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி அதிக நேரம் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கி சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.