61-வது மலர்க் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்ச் செடிகள் நடவு

61-வது மலர்க் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்ச் செடிகள் நடவு
Updated on
1 min read

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர்க் கண்காட்சிக்காக மலர் செடிகளை நடும் பணி இன்று (நவ.24) தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கும் இடமாக பிரையண்ட் பூங்கா விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 2024-ம் ஆண்டு மே மோதம் நடக்க உள்ள 61-வது மலர் கண்காட்சிக்காக முதல் கட்டமாக இன்று ( நவ.24 ) பிரையண்ட் பூங்காவில் மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் காயத்ரி தொடங்கி வைத்தார்.

பூங்கா ஊழியர்கள் மலர்ச் செடிகளை நடவு செய்தனர். சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், லில்லியம் போன்ற வகையிலான 20,000 மலர்ச் செடிகள் ஒரே நாளில் நடவு செய்யப்பட்டது. மொத்தம் 80 ஆயிரம் மலர்ச் செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவ பாலன் கூறியதாவது: "2024-ம் ஆண்டு நடக்கவுள்ள மலர் கண்காட்சியை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக ஜனவரியில் மலர்ச் செடிகளை நடவு செய்ய உள்ளோம்.

மலர்ச் செடிகளை பனி மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்படும் மலர்ச் செடிகள் மலர் கண்காட்சியின் போது பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in