தொடர் விடுமுறை | கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா வாகனங்களால் நகர்ப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சனி, ஞாயிறு விடுமுறை, நாளை (அக்.23) திங்கட்கிழமை ஆயுதபூஜை, நாளை மறுநாள் (அக்.24) செவ்வாய்க்கிழமை விஜயதசமி என 4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் திரண்டு வந்தனர். கொடைக்கானல் நகராட்சி சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துதான் கொடைக்கானல் நகருக்குள் நுழைய முடிந்தது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பின.
சுற்றுலா பயணிகள் வருகையால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்து ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இன்று (அக்.22) காலை முதலே இதமான தட்ப வெப்பநிலையது. தரையிறங்கி வந்த மேகக் கூட்டங்கள், பனிமூட்டத்துக்கு நடுவில் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் நகர் மட்டுமின்றி அனைத்து சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமப்பட்டனர். இதை தடுக்க, விடுமுறை நாட்களில் கூடுதல் போலீஸாரை தற்காலிக பணியாக கொடைக்கானலுக்கு மாவட்ட காவல்துறை அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
