

திண்டுக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கார்ல்டன் ஹோட்டலில் சமையல் கலைஞர்களுடன் இணைந்து சுற்றுலா பயணிகள் 520 கிலோ பிளம் கேக் தயாரிப்பதற்கான கலவையை தயார் செய்யும் பணியில் இன்று (அக்.18) ஈடுபட்டனர்.
கிறிஸ்துமஸூக்காக தயாரிக்கப்படும் பிளம் கேக் தனித்துவம் வாய்ந்தது. கேக் செய்வதற்கு தேவையான கலவையை 40 நாட்கள் வரை ஊற வைத்து, கிறிஸ்துமசுக்கு ஓரிரு தினங்களுக்கு முன் வேக வைத்து கேக் தயாரிப்பர். அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள கார்ல்டன் ஹோட்டலில் பிளம் கேக் தயாரிப்பதற்கான கலவை (புட்டிங்) செய்யும் பணி இன்று (அக்.18) நடைபெற்றது.
அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை உள்ளிட்ட 15 வகை பழங்கள், 5 வகையான உயர் ரக மது வகைகளை கொண்டு 520 கிலோ பிளம் கேக் தயாரிப்பதற்கான 130 கிலோ கலவையை (புட்டிங்) சமையல் கலைஞர்களுடன் இணைந்து சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகள் ராஜேஷ், பிரதிபா ஆகியோர் தயார் செய்தனர். அதனை 2 மாதம் வரை பதப்படுத்தி, கிறிஸ்துமசுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாவு சேர்த்து 520 கிலோ பிளம் கேக் தயாரிக்க உள்ளனர். அந்த கேக்கை கிறிஸ்துமஸ் அன்று சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு வழங்க உள்ளனர்.
இந்நிகழ்வில் ஹோட்டல் துணைத் தலைவர் ராஜ்குமார் ராமன், துணை மேலாளர் கிறிஸ்டோபர் கலைச்செல்வன், சமையல் கலைஞர் சுப்பராயலு உடன் இருந்தனர். பிளம் கேக் தயாரிப்பது குறித்து சமையல் கலைஞர்கள் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் அளித்தனர்.