

உதகை: மலை மாவட்டமான நீலகிரியில் 65 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இதில் நீலகிரி, கூடலூர் வனக்கோட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி தேசிய பூங்காவாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதிகளில் அரிய வகையை சேர்ந்த பல்வேறு தாவர, விலங்கினங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களையும், இயற்கை காட்சிகளையும் கண்டுகளிக்க ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வருவோரில் சிலர் ஆபத்தை உணராமல், வனத்துறை தடை விதித்துள்ள பகுதிகள் மற்றும் வன விலங்குகளிடம் அத்துமீறி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால், மலைப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கின்றன. அருவி, ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் லாஸ் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடையை மீறி உள்ளே செல்லும் சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் பாறை மற்றும் தண்ணீரில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கின்றனர்.
காட்டு மாடுகளுக்கு இடையூறு: நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இந்நிலையில், உதகை - கோத்தகிரி சாலையில், சாலையை கடக்க முயன்ற காட்டு மாட்டை பின்தொடர்ந்து, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் அந்த விலங்கை அச்சுறுத்தியுள்ளனர்.
இதேபோல, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்குள் இருந்து வெளியேறிய காட்டு மாடு கூட்டம், பிரதான சாலையில் முகாமிட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஒற்றை காட்டு மாடு சாலையில் உலா வந்ததை கண்ட சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் அதன் அருகே சென்று புகைப்படம், செல்ஃபி எடுத்து இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோத்தகிரியில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு மாடு, குடியிருப்பு பகுதி அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வசிக்கும் பெண், அகன்ற பாத்திரத்தில் குடிநீர் வைத்து தாகம் தணித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆபத்து நிறைந்த வன விலங்குகளுக்கு தண்ணீர் வைப்பதும், உணவளித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் தொடர் கதையாகிவிட்டது. இத்தகைய அத்துமீறல்கள் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.