

கொடைக்கானல்: ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பசுமைப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, நட்சத்திர ஏரி என சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
இதுமட்டுமின்றி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடிச் சோலை அருவி, வட்டக்கானல் பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளும் உள்ளன. இவை தவிர இயற்கை எழில் கொஞ்சும் நீர் வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன. அவை எங்கு இருக்கின்றன என்று பலருக்கும் தெரியாது. அந்த அருவிகள் பற்றி அறிந்தவர்கள், உள்ளூர் மக்கள் உதவியுடன் அங்கு சென்று பார்த்துச் செல்கின்றனர்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய சுற்றுலா இடங்களை பட்டியலில் இணைக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டது.
அதன்படி கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறையில் உள்ள ஓராவி அருவி, அஞ்சு வீடு அருவி, தாண்டிக்குடி அருகேயுள்ள புல்லாவெளி அருவி, வில்பட்டியில் உள்ள குதிரையாறு அருவி, போளூரில் உள்ள புலவிச்சாறு அருவி உள்ளிட்டவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாப் பட்டியலில் இணைக்கப்பட்டன.
ஆனால், தற்போது வரை சுற்றுலாப் பயணிகள் அந்த அருவிகளைப் பார்த்து ரசிக்க சுற்றுலாத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக் காலத்தில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவிகளைக் கண்டு ரசிக்க இரண்டு கண்கள் போதாது.
ஏற்கெனவே பார்த்த இடங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துச் சலித்துப்போன சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அருவிகள் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதனால் அருவிகளுக்குச் சென்று வர பாதை வசதி, அருகில் சென்று ரசிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலாப் பட்டியலில் இணைக்கப் பட்டுள்ள அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வரவும், தேவையான வசதிகள் மற்றும் கிராமச் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.