

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 2-வது சீசனை வரவேற்கும் விதமாக மலைப்பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ப்ரூனஸ் மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை கால சீசன் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து 2-வது சீசன் (ஆஃப் சீசன்) தொடங்க உள்ளது. இந்த சீசனை அனுபவிக்க விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கொடைக்கானலுக்கு வருவது உண்டு.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் 2-வது சீசனை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் முழுவதும் ப்ரூனஸ் மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலைப் பகுதிகளில் வழிநெடுகிலும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் ப்ரூனஸ் மலர்கள் பூத்துள்ளன.
இந்த மலர்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு பூத்துக் குலுங்கும். மரம் முழுவதும் இலைகளின்றி பூக்கள் மட்டுமே இருக்கும் ப்ரூனஸ் பூக்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.