

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவராலும் விரும்பக்கூடிய இடமாக திகழும் பிரையன்ட் பூங்காவுக்கு வயது 115. கொடைக்கானல் நட்சத்திர ஏரியை ஒட்டிய பகுதியில் 20 ஏக்கரில் பிரையன்ட் பூங்கா அமைந்துள்ளது. 1908-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த வன அதிகாரி ஹெச்.டி.பிரையன்ட், இந்த பூங்காவை அமைத்தார்.
அவரது பெயரால் அமைக்கப்பட்ட பூங்காவில் ஆண்டு முழுவதும் பல்வேறு காலநிலைகளில் பூக்கும் பூச்செடிகள், குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியா, லில்லியம் மற்றும் அலங்காரச் செடிகள் என மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் உள்ளன.
க்யூஆர் கோட் வசதி: இங்குள்ள பூக்களைப் பற்றிய தகவல்களை அறிய வசதியாக, ஒவ்வொரு பூக்களின் பெயர் பலகையிலும் ‘க்யூஆர் கோட்’ ஒட்டப்பட்டுள்ளது. அந்த க்யூஆர் கோடை மொபைல் போனில் ஸ்கேன் செய்து, பூவின் தாவர இனம், தாவரவியல் பெயர், தோன்றிய நாடு, குடும்பம் மற்றும் குணம் போன்ற முழு தகவல்களை அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில் உள்ளது. பூங்கா பகுதியில் காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம், சராசரி வருட மழை 1,260 மி.மீ., காற்றின் வேகம் 13 கி.மீ., வெப்பநிலை அதிகபட்சம் 24 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 3 டிகிரி செல்சியஸ் ஆகும்.
வெயில் குறைவு: பூங்காவில் கோடை காலத்தில் 10 மணி நேரம், குளிர்காலத்தில் 8 மணி நேரம் மற்றும் மழைக்காலத்தில் 6 மணி நேரம் சூரிய ஒளி விழும். பூக்கள் மட்டுமின்றி ஓங்கி வளர்ந்த மரங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓடி விளையாட, ஆடிப்பாடி மகிழ வசதியாக பரந்து விரிந்த பிரம்மாண்ட புல் தரைகள், ஆர்ப்பரிக்கும் நீரூற்று, அசோக சின்னம், மரத்தி லான இருக்கைகள் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவுக்கு வர தவறுவதில்லை. காலை 11 மணிக்கு மேல் தரையிறங்கி வரும் மேகக் கூட்டம், லேசான சாரல், மெல்ல வருடும் இதமான குளிர் என்று சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கும் வகையில் பூங்கா அமைந்துள்ளது.
கோடை மலர் கண்காட்சி: ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு நடத்தப் படும் கோடை விழாவின் ஒரு பகுதியான மலர் கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 20 வகையான கற்றாழை, பல்வேறு பகுதிகளில் வளரக்கூடிய கள்ளிச் செடிகள், பார்த்ததும் மனம் கவரும் மினியேச்சர் (மிகச்சிறிய) வகையிலான தாவரங்கள், பூச்செடிகள் உள்ளன. தோட்டக்கலைத் துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவில் நுழைவுக் கட்டணம் குழந்தைகளுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30. சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை, கேன்டீன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
அதிகரிக்கும் பயணிகள் வருகை: இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், ஆண்டுதோறும் பிரையன்ட் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேறு எங்கும் பார்க்க முடியாத பூச்செடிகளை இப்பூங்காவில் பார்த்து ரசிக்க முடியும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதிய வகை தாவரங்கள், பூச்செடிகளை நடவு செய்கிறோம். மேலும் விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு தாவரங்கள், பூச்செடிகளை விற்பனையும் செய்கிறோம் என்று கூறினார்