கொடைக்கானலின் ‘மர்ம தேசம்’ மதிகெட்டான் சோலை!

கொடைக்கானலின் ‘மர்ம தேசம்’ மதிகெட்டான் சோலை!
Updated on
3 min read

கொடைக்கானல்: தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல். கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். மோயர் பாய்ன்ட்டில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி.

இந்த ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பித்தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு, வியூ பாய்ன்ட் மற்றும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள் என இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். வனத்துறை சார்பில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். வனத்துறை வாகனத்தில் செல்ல ஒரு நபருக்கு ரூ.100, சொந்த வானங்களில் பயணிக்க காருக்கு ரூ.200, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றனர்.

மிகப்பெரிய நன்னீர் ஏரி: பேரிஜம் ஏரி மொத்தம் 24 கி.மீ. சுற்றளவில் பரந்து விரிந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த ஏரி தண்ணீர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி மக்களின் குடிநீராக பயன்படுகிறது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரி என்ற பெருமையை பேரிஜம் ஏரி பெற்றுள்ளது. இப்பகுதியில் வன விலங்குகள் ஏராளமாக வசிக்கின்றன. ஏரிக்கு தண்ணீர் பருக வரும் யானைகள், மான்கள், காட்டுமாடு களை பார்க்கலாம்.

மர்மம் நிறைந்த சோலை காடு: பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் மூலிகைகள் நிறைந்துள்ள மிக முக்கியமான இடம் மதிகெட்டான் சோலை. இந்த இடத்தை பல மர்மங்கள் நிறைந்த காடு என்றுகூட சொல்லலாம். 115 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இன்று வரை இந்த காட்டில் அப்படி என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. தடையை மீறி உள்ளே நுழைந்து வழி தெரியாமல் சென்ற பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள மூலிகைகள் மதியை மயக்கும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ 250 தாவர வகைகள் உள்ளன. அதில் 42 வகை தாவரங்கள் சிறந்த மருத்துவக் குணங்களை கொண்டவை. குறிப்பாக செலட்ரஸ், அழுகண்ணி, காட்டு செண்பகம், கம்பளி வெட்டி, சோலை அரளி போன்ற 5 வகை அரிய தாவரங்கள் இப்பகுதியில் உள்ளன.

விலையுர்ந்த மலர், கல்பாசி: உலகிலேயே அரிய, அதிக விலையுர்ந்த ‘ஆர்கீடு’ மலர்கள் இங்கு காணப்படுகின்றன. இது தவிர, போலியோஸ் பிரக்டோஸ், புரூட்டிகோஸ் எனும் 3 வகையான கல்பாசிகளும் உள்ளன. இவை சீதோஷ்ண நிலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பாசிகள், பூஞ்சைகளின் கூட்டுத்தொகுப்பாகிய லைக்கன்கள் காணப்படுகின்றன.

இவற்றில் பாசியானது ஒளிச்சேர்க்கை மூலம் உணவு உற்பத்தி செய்து பூஞ்சைகளுக்கு அளிக்கிறது. மேலும் பூஞ்சையானது காற்று மண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பாசிகளுக்கு கொடுக்கிறது. இந்த வனப்பகுதியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள சோலை மரங்கள் நிறைந்து இருப்பதால், எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரியும் அதிசயம் காண்போரை வசீகரிக்கின்றது.

உயிருள்ள நீர்த்தேக்கம்: இந்த வனத்தில் தரைப்பகுதியில் 6 அங்குலம் உயரத்துக்கு இலை சருகுகள் பரவி கிடக்கின்றன. இவை மழை நீரை அப்படியே சேகரித்து வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனால் இந்த வனப்பகுதியை உயிருள்ள ‘நீர்த்தேக்கம்’ என்று அழைக்கின்றனர். இவை பல நீர் நிலைகளுக்கு நீரை வழங்கும் மூலாதாரமாக உள்ளது. பல உயிரினங்களின் வாழிடமாகவும் இருக்கிறது. கொடைக்கானலுக்கு வருவோர் நிச்சயம் ஒரு முறை பேரிஜம் ஏரி பகுதிக்கு ஒரு முறை போய் வரலாம்.

பயணிகளுக்கு அனுமதி: இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி குறைந்த சுற்றுலாப் பயணிகளே அனுமதிக்கப்படுகின்றனர். செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனுமதி உண்டு.

மதிகெட்டான் சோலைக்குள் சென்று பார்த்தால் திசைகளே தெரியாது. இதனால் உள்ளே செல்பவர்கள் திசை மாறி சென்று ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதியில்லை. பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் மலைச்சாலையில் நின்றபடி மதிகெட்டான் சோலையை கண்டு ரசிக்கலாம். வழக்கமான சுற்றுலா இடங்களை பார்த்து அலுத்து போனவர்கள் பேரிஜம் ஏரிக்கு வந்து செல்லலாம், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in