தொடர் மழையால் கொடைக்கானலில் தண்ணீர் கொட்டும் அருவிகள்

தொடர் மழையால் கொடைக்கானலில் தண்ணீர் கொட்டும் அருவிகள்
Updated on
1 min read

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (ஜூன் 21) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 11 மணிக்கு மேல் 30 நிமிடத்திற்கும் மேலாக மழை கொட்டியது. மழை நின்றதும் சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது.

சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. இன்று காலை 8 மணி நிலவரப்படி 3 செ.மீ. மழைப்பதிவானது. நேற்று பகலில் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர்சோலா அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, அஞ்சு வீடு அருவி, எலிவால் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதேபோல், மலையடிவாரத்தில் உள்ள மஞ்சளாறு அணை, பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, பரப்பலாறு அணை ஆகிய அணைகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மலைச்சரிவுகளில் புதிய புதிய அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கின்றன. தொடர் மழை காரணமாக பகலில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இரவில் கடும் குளிரும் நிலவியது. மழைப் பெய்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in