

கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் உள்ள மிக முக்கியமான இடங்களில் பிரையன்ட் பூங்காவும் ஒன்று. கொடைக்கானல் வரும் பயணிகள் பிரையன்ட் பூங்காவை சுற்றிப் பார்க்க தவறுவதில்லை.
கடந்த 1908-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த வன அதிகாரி ஹெச்.டி.பிரையன்ட், கொடைக்கானல் ஏரிக்கு அருகில் சிறிய பூங்காவை அமைத்தார். அவரது பெயரால் அமைக்கப்பட்ட பிரையன்ட் பூங்கா தற்போது 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தோட்டக்கலைத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த பூங்காவில் ஆண்டு முழுவதும் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன.
இதை பார்த்து, ரசிக்க ஆண்டுதோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனில் நடக்கும் மலர்க் கண்காட்சியின் போது பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை பார்வையிட தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் இடமாக இங்குள்ள கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது.
மொத்தம் 250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகையில் 20 வகையான கற்றாழைச் செடிகள், பல்வேறு பகுதிகளில் வளரக்கூடிய கள்ளிச் செடிகள், மினியேச்சர் (மிகச் சிறிய) வகையிலான தாவரங்கள், மலர்ச் செடிகள் மற்றும் பிரம்ம கமல செடிகளையும் வளர்த்து வருகின்றனர்.
இங்குள்ள கற்றாழைச் செடிகள், அரிய வகை தாவரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள அரிய வகை கற்றாழைச் செடிகளை இங்குள்ள கண்ணாடி மாளிகையில் பார்க்க முடியும். பிரையன்ட் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக கண்ணாடி மாளிகை உள்ளது என்று கூறினார்.