

இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க, கிராமப்புறங்களில் தண்டோரா மூலம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனிடையேகரோனா ஊரடங்கில்மாணவ, மாணவிகள் இடைநிற்றலை தடுக்க கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி மற்றும் கனகமூட்லு அரசுப்பள்ளி களுக்கு உட்பட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுடன் இணைந்து பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் தமிழ்செல்வன் கூறும்போது, கிராமப் புறங்களில் மக்களிடையே எளிதாக புரிய வைப்பதற்காக தண்டோரா மூலம் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மூன்றாம் பாலின மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அம்மாணவர்களுக்கு தேவையான உதவிகள் அரசு மூலம் பெற்றுத்தர ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சிஇஓ, டிஇஓ தலைமையில் ஆசிரி யர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கிராம கல்விக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுக்கும் பணிகள் வருகிற 31-ம் தேதி வரை நடைபெறும், என்றார்.