

சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
புதுச்சேரி: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விவரித்துள்ளார்.
சோஹோ நிறுவனம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இடையே இன்று (மார்ச் 10) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஸ்ரீதர் வேம்பு கூறியது: “சோஹோ நிறுவனம் பிட்ஸ் டூ Atom (பிட்ஸ்-இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டம் -மெட்டிரீயல் சையின்ஸ், நானோ டெக்னாலஜி, பேட்டரி டெக்னாஜி, கெமிக்கல்ஸ்) பெரிய ட்ரான்ஸ்பர்மேஷன் நடக்கிறது. அதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓர் அடித்தளமாக இருக்கும்.
அடுத்த 2, 3 வருடங்களில் விஞ்ஞானிகள், டெக்னிஷியன்களை எடுத்து புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு கண்டுபிடிப்புகள் நடக்கும். அதன்பிறகு அது வணிக நோக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
சோடியம் பேட்டரிகள் அதிகம் தேவை இருக்கிறது. கார்பன் பைபர் தேவையும் உள்ளது. இதுபோல் பலவிதமானவை தேவைப்படுகிறது. இதையெல்லாம் செய்வதற்கான ஆரம்பமாக இது இருக்கப்போகிறது.
அதற்கு சோடியம் டெக்னாலஜி மிக முக்கியம். அதுபோல் பலவிதமான பேட்டரி டெக்னாலஜி வருகிறது. இந்த தொழில்நுட்பங்கள் இந்தியாவில் வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நல்ல நானோ டெக்னாலஜி, கிரீன் எனர்ஜி மையம் இருக்கிறது. விஞ்ஞானிகளை கொண்டு அதனை தொடங்க உள்ளோம்.
பொருளாதார ரீதியாக பெட்ரோலியம் விலை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் தடை வருவதற்கான வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் அங்கு 90 ஆயிரம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வணிகம் குறைந்துள்ளது. அது இந்தியாவில் தொடங்கியுள்ளது.
சோடியம் பேட்டரி டெக்னாலஜி வருங்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அது ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். கார்பன் பைபர் ட்ரோன் டெக்னாலஜி, மிசேல் டெக்னாலஜி என நம் தேசத்துக்கு பல விதங்களுக்கு தேவைப்படுகிறது. அதை செய்ய முடியுமா என்பதையும் ஆராய்ச்சி செய்ய உள்ளோம்.
ஏஐ டெக்னாலஜியால் மென்பொருளில் மட்டும் வேலை என்று சொல்ல முடியாது. இன்றைக்கு மென்பொருளில் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் எப்படி வேலை வாய்ப்பு இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது.
சோலார் எனர்ஜி எல்லா இடங்களிலும் இருக்கிறது. சோஹோ நிறுவனம் சார்பில் 25 மெகாவாட் சோலார் அமைத்துள்ளோம். ஆனால், சூரிய வெளிச்சம் இல்லாதபோது செய்ய வேண்டும். அந்தளவுக்கு ஸ்டோரேஜ் வேண்டும். அது மலிவாக இல்லை.
முதலில் ஏஐ டெக்னாலஜியை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு புதிய டெக்னாலஜி இருக்கும்போதும் அதில் வேலைவாய்ப்புகள் வரும். சில பழைய டெக்னாலஜியில் வேலைவாய்ப்புகள் போகும். அது போய்விட்டதே என்று நினைக்காமல், புதிய வாய்ப்புகள் வரும்போது அதில் நுழைய வேண்டும்.
ஏஐ டெக்னாலஜியை வைத்து 10 பேர் செய்யும் வேலையை 2 பேர் செய்யும் நிலையும் இருக்கிறது. இது எப்படி இருக்கும் என்பது அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு தான் தெரியும். ஆனால் எல்லோரும் அதற்கு தயாராக வேண்டும்.
செல்போன், ஏஐ டெக்னாலஜி என எதுவாக இருந்தாலும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது. தொழில்நுட்பத்தை குழந்தைகளோடு கலக்க விடக்கூடாது. 13 வயது குழந்தைகள் சமூக வலைப்பின்னல்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் ஆந்திராவில் கொண்டு வரப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது.
ஏஐ டெக்னாலஜியில் பல ஆபத்துக்கள் இருந்தாலும், நல்ல விஷயங்கள் அதில் நிறைய இருக்கின்றன. ஆகவே அதனை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். ஏஐ டெக்னாலஜியில் இந்தியாவும் பெரிய சக்தியுள்ள நாடு என்பதை இப்போது நாம் நிலைநாட்ட ஆரம்பித்துள்ளோம்.
ஏஐ-ல் செக்யூரிட்டி பிரச்சினைகள் இருக்கிறது. நம்முடைய டேட்டாவை எங்காவது சென்று கொடுத்துள்ளோம். அந்த செக்யூரிட்டி டூலில் வளர்ச்சி இருந்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.