

அப்துல் கலாம் 1958ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சி அமைப்பில் (DRDO) பணியில் சேர்ந்தார்.
உள்நாட்டு ராணுவத் தொழில் நுட்பத்துக்குத் தேவையான அடிப்படைப் பணிகளுக்கு அடித்தள மிட்டார்.
இஸ்ரோ
1969ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (ISRO) தனது பணியைத் தொடங்கினார். எஸ்எல்வி-3இன் திட்ட இயக்குநராக இருந்து, 1980ஆம் ஆண்டு ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவினார்.
ஒருங்கிணைந்து வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP – Integrated Guided Missile Development Program) நிர்வாக இயக்குநராக இருந்தபோது அக்னி, பிரித்வி ஏவுகணைகளின் வளர்ச்சிக்கு வழிகோலினார்.
பொக்ரான் அணுகுண்டு
பிரதமருக்கான தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம், 1998ஆம் ஆண்டில் பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையின் முக்கியத் தொழில்
நுட்ப வல்லுநராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். 1999-2001 காலக்கட்டத்தில் அப்துல் கலாம் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இருந்தார். அப்போது தேசியத் தொழில்நுட்பக் கொள்கைகளை வகுப்பதில் முனைப்புக் காட்டினார்.
கரோனரி ஸ்டென்ட்
கலாமும் இதய அறுவைசிகிச்சை நிபுணர் சோமராஜுவும் இணைந்து, குறைந்த விலையில் இதய சிகிச்சைக்கான ஸ்டென்ட்டை உருவாக்கினர். இதனால் ஏழை மக்களும் இதய சிகிச்சையை எளிதாகப் பெற முடிந்தது.
உள்நாட்டுத் தயாரிப்பு
சர்வதேச அமைப்புகள் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியபோது, இந்தியக் கல்வி நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் இணைத்து, ஒரு கூட்டமைப்பை கலாம் உருவாக்கினார். இதன் மூலம் உள்நாட்டிலேயே ஏவுகணைத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான உதிரி பாகங்கள் கிடைக்க வழிசெய்தார்.
பாரத ரத்னா
விண்வெளிப் பாதுகாப்பு - ஆராய்சி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அப்துல் கலாம் ஆற்றிய பங்களிப்புக்காக, ‘பாரத ரத்னா’ விருது 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.