

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏவிய வாயேஜர்-1 விண்கலம் பூமியில் இருந்து 2,590 கோடி கி.மீ. தூரத்தை நேற்று எட்டி சாதனை படைத்துள்ளது. இது ஒரு முழு நாள் ஒளித் தொலைவு ஆகும்.
வாயேஜர்-1 விண்கலம் 1977 செப்.5-ல் புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. அதன் இரட்டைச் சகோதரியான வாயேஜர்-2 சற்று முன்னதாகவே, அதாவது ஆக.20-ல் ஏவப்பட்டிருந்தது. 2 விண்கலங்களும் வெளிக்கோள்கள் குறித்த ஆய்வுக்காகவே வடிவமைக்கப்பட்டன.
வாயேஜர்-1 தனது பயணத்தில் வியாழன், சனி ஆகிய இரு கோள்களை மட்டுமே நெருங்கிச் சென்றது. 1979 மார்ச் 5-ல் வியாழனை அணுகியது. அப்போது அதன் கேமரா, வியாழனின் நிலவான ‘அயோ’வில் எரிமலைகள் வெடிப்பதைப் படமெடுத்தது. பூமிக்கு வெளியே இயக்கத்தில் உள்ள எரிமலைகள் இருப்பதற்கான முதல் சான்று அதுவே. 1980 நவ.12-ல் சனியை நெருங்கியது. சனி வளையங்களின் சிக்கலான அமைப்பையும், டைட்டன் நிலவின் அடர்த்தியான நைட்ரஜன் வளிமண்டலத்தையும் அது வெளிப்படுத்தியது.
சனியைக் கடந்த பிறகு, வாயேஜர்-1 சூரியக் குடும்பத்தின் தளத்தில் இருந்து சுமார் 30 டிகிரி கோணத்தில் விலகி, வெளிநோக்கிய நீண்ட பயணத்தைத் தொடங்கியது. சூரியக் குடும்ப எல்லையை, அதாவது சூரியப் புயல் விண்மீனிடைச் சூழலுடன் மோதும் ‘ஹீலியோபாஸ்’ பகுதியை 2012 ஆக.25-ல் கடந்தது. அப்போது அது சூரியனில் இருந்து சுமார் 1,830 கோடி கி.மீ. தூரத்தில் இருந்தது. அந்தத் தருணத்தில், மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியக் குடும்பத்தைவிட்டு விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் நுழைந்து சாதனை படைத்தது.
சரியாக வேலை செய்யவில்லை என்றால், கைபேசியை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து செயல்படுவதுதான் வாயேஜர்-1 விண்கலத்தின் வியக்கத்தக்க அம்சம்.
அதன் ஆற்றல் தேவைக்கு மூன்று ரேடியோ ஐசோடோப் வெப்ப மின் உற்பத்திக் கருவிகள் (RTGs) துணைசெய்கின்றன. புளூட்டோனியம்-238-ன் இயற்கைச் சிதைவு வெப்பத்தை வெளியிடுகிறது; இந்தக் கருவி அந்த வெப்பத்தை மின் ஆற்றலாக மாற்றுகிறது. வரும் 2035 வரைதான் மின் உற்பத்தி நடைபெறும் எனக் கருதப்படுகிறது. எனினும், வாயேஜர்-1 தொடர்ந்து பயணிக்கும். அதை உருவாக்கிய பொறியாளர்கள், அதன் பயணத்தைப் பின்தொடர்ந்த மக்கள் மறைந்த பிறகும்கூட, விண்மீன்களுக்கு இடையேயான இருளில் அது தொடர்ந்து செல்லும்.
அடுத்த 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, கிலீஸ் 445 எனும் விண்மீனுக்கு அருகே அது பறந்துசெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- கட்டுரையாளர்: த.வி.வெங்கடேஸ்வரன், பேராசிரியர், மொஹாலி இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனம். (tvv123@gmail.com)
ஒளி நாள் என்பது என்ன?
விண்வெளியில் தூரத்தை அளக்க வானியலாளர்கள் ஒளியின் வேகத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒளி ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. பயணிக்கும். ஓர் ‘ஒளி நாள்’ என்பது 24 மணி நேரத்தில் ஒளி கடக்கும் தூரம். அதாவது சுமார் 2,590 கோடி கி.மீ.
நிலவு நம்மிடம் இருந்து சராசரியாக 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ளது. ஒளி அங்கு செல்ல 1.3 விநாடிகள் மட்டுமே ஆகும். சூரியன் 15 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது; அதன் ஒளி நம்மை அடைய சுமார் 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன.
இந்த கணக்கில் பார்த்தால், ஒரு நாள் முழுக்க ஒளி பயணம் செய்தால் அடையக்கூடிய தூரத்தில், அதாவது ஒரு முழு நாள் ஒளித் தொலைவில் வாயேஜர்-1 தற்போது இருக்கிறது.
பூமியை ‘க்ளிக்’ செய்த வாயேஜர்
1990 பிப்.14-ல் வானியலாளர் கார்ல் சேகனின் வேண்டுகோளுக்கு இணங்க, வாயேஜர்-1 விண்கலம் தனது கேமராவைத் திருப்பிப் பூமியை நோக்கியது. சுமார் 600 கோடி கி.மீ. தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், சூரிய ஒளிக்கற்றையில் தொங்கும் மிகச் சிறிய புள்ளியாக பூமி தெரிந்தது. அந்த ஒளிப்படம் ‘வெளிர் நீலப் புள்ளி’ (Pale Blue Dot) என்று புகழ்பெற்றது.
பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் வெறும் தூசு என்பதை நினைவூட்டி, நாடு, மதம் என நாம் போடும் சண்டைகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை அது நமக்குக் காட்டியது. உலக மக்கள் எல்லோரும் இந்தச் சிறிய படகில்தான் பிரபஞ்சம் எனும் கடலில் நீந்துகிறோம். இந்தப் படகை அழியாமல் காப்பது நமது பொறுப்பு என்கிற கருத்தையும் அது விதைத்தது.