

வகுப்பறைக் கற்பித்தலிலும் இணையவழிக் கல்வியிலும் காணொளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், மாணவர்கள் காணொளிகளைப் பார்ப்பதால் மட்டுமே பாடத்தை முழுமையாகப் புரிந்துகொண்டார்கள் என்று கூறிவிட முடியாது. காணொளிகளை வெறுமனே பார்ப்பதை மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய செயல்பாட்டுக் கற்றலாக மாற்ற உதவும் தளமே Edpuzzle.
யூடியூப், கான் அகாடமி போன்றவற்றிலுள்ள காணொளிகளிலும் ஆசிரியர்கள் சொந்தமாகப் பதிவேற்றிய காணொளிகளிலும் வினாக்கள், குறிப்புகள், விளக்கங்களை இணைத்து ஊடாடும் காணொளிப் பாடங்களை (Interactive Video Lessons) உருவாக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு மூலம் வினா உருவாக்கம் (Teacher Assist AI)
Edpuzzle தளத்தின் ‘Teacher Assist’ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சம், காணொளியில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் தானாகவே வினாக்களை உருவாக்க உதவுகிறது. பல்தெரிவு வினாக்களையும், விரிவான பதில்களைக் கோரும் திறந்தநிலை வினாக்களையும் உருவாக்கலாம்.
தானியங்கி மதிப்பீடும் பின்னூட்டமும் (Autograding & Feedback)
மாணவர்கள் காணொளியைப் பார்க்கும்போதே அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வினாக்களுக்குப் பதிலளிக்கலாம். பல்தெரிவு வினாக்கள் தானாக மதிப்பிடப்படுகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பதில்களை மதிப்பிடுவதற்கான ‘Autograde’ வசதியும் உள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச்சுமையைக் குறைக்கவும், மாணவர்களின் கற்றல் இடைவெளிகயைக் கண்டறியவும் முடியும்.
காணொளியைத் தாண்டிச் செல்வதைத் தடுத்தல் (Prevent Skipping)
மாணவர்கள் காணொளியின் முக்கியப் பகுதிகளைப் பார்க்காமல் முன்னோக்கித் தாண்டிச் செல்வதைத் தடுக்கும் வசதி இதில் உள்ளது. ஆசிரியர்கள் ‘Prevent Skipping’ அம்சத்தைச் செயல்படுத்துவதன் மூலம் காணொளியை முறையாகப் பார்ப்பதை ஊக்குவிக்கலாம். இடையிடையே கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் கவனத்தைப் பாடத்தின் மீது செலுத்துவதற்கு உதவுகின்றன.
குரல் விளக்கங்களும் குறிப்புகளும் (Voiceover & Audio Notes)
ஆசிரியர்கள் நேரடியாகப் பதிவேற்றிய காணொளிகளில் தங்களின் சொந்தக் குரலில் கூடுதல் விளக்கங்களைப் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட இடங்களில் எழுத்துக் குறிப்புகளையும் ஒலிக் குறிப்புகளையும் இணைக்கலாம். இதனால் மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப பாட உள்ளடக்கத்தை மாற்றியமைக்க முடியும். இருப்பினும், யூடியூப் காணொளிகளில் நேரடியாகக் குரல் விளக்கத்தைச் சேர்ப்பதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
மாணவர்களின் கற்றல் முன்னேற்றப் பகுப்பாய்வு (Learning Analytics)
மாணவர்கள் காணொளியில் எவ்வளவு பகுதியைப் பார்த்துள்ளனர், வினாக்களுக்கு எவ்வாறு பதிலளித்துள்ளனர், பெற்ற மதிப்பெண்கள் என்ன, எந்த வினாக்களில் அதிகம் தவறிழைத்துள்ளனர் போன்ற தகவல்களை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளலாம். இந்தத் தகவல்களின் அடிப்படையில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து சிறப்புக் கவனம் செலுத்தலாம்.
கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு (LMS Integration)
Google Classroom, Moodle, Schoology, Blackboard போன்ற கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் Edpuzzle தளத்தை இணைத்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆசிரியர்கள் காணொளிப் பாடங்களை வழங்கவும், மாணவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் முடியும்.
நேரலை வகுப்பறை (Live Mode)
ஆசிரியர்கள் வகுப்பறையில் காணொளியைத் திரையிட்டு, அதிலுள்ள வினாக்களுக்கு மாணவர்கள் தங்களின் கணினி அல்லது திறன்பேசி மூலம் நிகழ்நேரத்தில் பதிலளிக்கச் செய்யலாம். பதில்களின் அடிப்படையில் மாணவர்களின் புரிதலை அறிந்து, தேவையான இடங்களில் கூடுதல் விளக்கங்களை வழங்கலாம்.
பிற தளங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
வழக்கமான காணொளிப் பகிர்வுத் தளங்களில் காணொளிகளைப் பார்ப்பதும் பகிர்வதும் முதன்மையான செயல்பாடுகளாக உள்ளன. Edpuzzle தளத்தில் காணொளியின் குறிப்பிட்ட இடங்களில் வினாக்களை இணைத்தல், மாணவர்களின் பதில்களை மதிப்பிடுதல், கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால் காணொளிவழிக் கற்றலைத் திட்டமிட்ட கற்பித்தல் செயல்பாடாக மாற்ற முடிகிறது.
யாருக்குப் பயன்படும்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், இணையவழிப் பயிற்சியாளர்கள், பாடத்திட்ட வடிவமைப்பாளர்களுக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும். காணொளிகளைப் பார்ப்பதுடன் மாணவர்கள் சிந்திக்கவும் பதிலளிக்கவும் தங்களின் புரிதலை மதிப்பிடவும் வாய்ப்பளிப்பதே Edpuzzle தளத்தின் சிறப்பம்சம்.
செய்யறிவு விதி: உங்கள் பள்ளி, கல்லூரி செய்யறிவுப் பயன்பாடு குறித்து என்ன விதிமுறைகளைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். விதிகளுக்கு உட்பட்டு, செய்யறிவைப் பயன்படுத்தி கற்பித்தலையும் கற்ற லையும் மேம்படுத்துங்கள். விதிகளைப் பின்பற்றினால் பெரும்பாலான சிக்கல்களைத் தவிர்த்துவிட முடியும்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.