

சிக்கலான கருத்துகள், தொழில்முறை அறிக்கைகள், கல்விப்புலம் சார்ந்த கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்வதைவிட, அவற்றை வரைபடங்களாகவோ (Diagrams), விளக்கப்படங்களாகவோ (Infographics) பார்க்கும்போது மனித மூளை மிக எளிதாகவும் வேகமாகவும் புரிந்து
கொள்கிறது. ஆனால், அத்தகைய படங்களை உருவாக்குவதற்கு வடிவமைப்புத் திறனும் (Design Skills) நேரமும் நமக்குத் தேவைப்படும். இந்தச் சவாலுக்கு புதுமையானதொரு தீர்வை வழங்குகிறது Napkin AI என்னும் அதிநவீன செய்யறிவுக் கருவி.
வழக்கமான வடிவமைப்பு மென்பொருட்களைப்போல வெற்றுப் பக்கத்தில் (Blank Canvas) தொடங்குவதற்குப் பதிலாக, இது நாம் எழுதும் உரையை (Text) ஆழமாகப் பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ற வரைபடங்களை உருவாக்கித் தருகிறது.
உரைநடையில் இருந்து வரைபடம் (Text-to-Visual Generation) Napkin AI தளத்தில் நமது கட்டுரைகளையோ பத்திகளையோ பதிவிட்டால் போதும்; குறிப்பிட்ட வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து ‘Generate Visual’ பொத்தானை அழுத்தினால், அந்த உரையின் மையக்கருத்தைப் புரிந்துகொண்டு, அதற்குப் பொருத்தமான செயல்வழிப் படங்களையும் (Flowchart), மன வரைபடங்களையும் (Mind Maps), தரவுசார் படங்களையும் (Data Charts) இது உடனுக்குடன் உருவாக்கித் தருகிறது.
முழுமையான தனிப்பயனாக்கம் (Full Customization) உருவாக்கப்படும் வரைபடங்களில் இருக்கும் வண்ணங்கள், எழுத்துருக்கள் (Fonts), வடிவங்கள், வடிவுருக்களை (Icons) நம் விருப்பத்துக்கேற்ப எளிதாக மாற்றியமைக்கவும் இக்கருவியில் வழியுள்ளது.
நிறுவனங்களின் அடையாள வண்ணங்களை (Brand Colors) இதில் ஏற்றி, அதற்கேற்ற வகையில் ஒரே சீரான வகையில் படங்களை வடிவமைக்கவும் முடியும். ஒரே படத்தைப் பல்வேறு விதங்களில் இக்கருவி உருவாக்கி அளிப்பதால், அவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உண்டு.
‘Sketch’ வசதியும் பல வடிவப் பதிவிறக்கமும் (Multi-Format Export) இதில் உள்ள ‘Sketch’ வசதியைக் கொண்டு படங்களின்மேல் வரையவும் மாற்றங்களைச் செய்யவும் முடியும். உருவாக்கப்பட்ட வரைபடங்களை PNG, PDF, SVG, PPT போன்ற பல்வேறு வடிவங்களில் பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இதில் உள்ளது.
நிகழ்நேர இணைவாக்கம் (Real-time Collaboration) குழுவாக வேலை செய்வோர் ஓர் ஆவணம் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் (Comments), ஒன்றாகச் சேர்ந்து அதைச் செப்பனிடவும் முடியும். இதன் வழியே, நிறுவனங்களின் திட்டப்பணிகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் விரைந்து செயல்படவும் முடிவுகளை எடுக்கவும் முடிகிறது.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
Canva, Adobe Express போன்றவற்றில் ஒவ்வொரு வடிவத்தையும் இழுத்து ஒட்ட வேண்டும் என்பதால் பணியை முடிக்க அதிக நேரமாகும். Gamma AI கருவி முழு விளக்கக்காட்சிகளையும் இணையப் பக்கங்களையும் உருவாக்கக் கூடியது. Napkin AI கருவியோ, குறிப்பிட்ட பத்திகளில் உள்ள கருத்துகளை மட்டும் விளக்கப்படங்களாக (Exploratory Visuals) மாற்றித் தருவதில் சிறப்புறச் செயல்படுகிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
திட்ட மேலாளர்கள் (Project Managers), எழுத்தாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள் (Marketers), பேராசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி அறிக்கைகளைத் தயாரிப்போர் நீண்ட பத்திகளைக் காட்சி வடிவிலான வரைபடங்களாக உருவாக்கி, கருத்துப் பரிமாற்றத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுவதில் Napkin AI முக்கியப் பங்காற்றுகிறது.
செய்யறிவு விதி
செய்யறிவுக் கருவிகளிடம் இருந்து சிறந்த பதிலைப் பெற வேண்டுமெனில், கட்டளை எழுதும் முறையைக் (Prompting) கற்றுக்கொள்ளுங்கள். சரியான முறையில் கட்டளைகளைத் தருவது தனித்ததொரு திறமையாகும். பயிற்சி செய்யச் செய்ய உங்கள் கட்டளைகள் மிகவும் நேர்த்தியாக மாறும். நேர்த்தியான கட்டளை செம்மையான பதில்களைப் பெற்றுத் தரும்.
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை:
Create a vibrant, professional flowchart titled “Student Success Journey”. Start → Set Goals →Plan Learning → Study → Practice → Take Assessment → Evaluate Performance.
Decision: Score → 80%?
Yes: Celebrate Success → Achieve Goal → End.
No: Analyze Mistakes → Improve Weak Areas → Practice Again → Retake Assessment
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.