முகத்தை வாடகைக்கு விட்டு லட்சங்களை ஈட்டும் சீனர்கள் - ஏஐ தரும் வாய்ப்பும் பின்புலமும்

முகத்தை வாடகைக்கு விட்டு லட்சங்களை ஈட்டும் சீனர்கள் - ஏஐ தரும் வாய்ப்பும் பின்புலமும்
Updated on: 
2 min read

“நாம் வீட்டில் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாலும், நமது முதலீடு நமக்காக உழைத்து மேலும் மேலும் பணத்தைச் சம்பாதித்துத் தர வேண்டும்” என்பது வர்த்தகத் துறை அனுபவசாலிகள் அடிக்கடி கூறும் அறிவுரை. ஆனால் சீனாவிலோ, எந்தவிதப் பண முதலீடும் செய்யாமல் ஒருவரின் ‘முகமே’ அவருக்கு லட்சங்களில் சம்பாதித்துத் தருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பணம் சம்பாதிக்கக் கடினமாக உழைக்க வேண்டும், உடலை வருத்த வேண்டும், மணிக்கணக்கில் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையெல்லாம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் முற்றிலும் தலைகீழாக மாற்றியுள்ளது. நாம் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், நமக்காக நமது முகம் இணையத்தில் நடித்துப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்?

கேட்பதற்கு ஏதோ ஓர் அறிவியல் கற்பனை கதை போலத் தோன்றும் இந்த விஷயம், சீனாவில் இன்று மாபெரும் வர்த்தகப் புரட்சியாகவே உருவெடுத்துள்ளது.

கேமரா முன் நிற்கத் தேவையில்லை. மேக்கப் போடத் தேவையில்லை. மழை, வெயில் என்று அலைந்து திரிந்து ஷூட்டிங் செல்லத் தேவையில்லை. எந்தவிதக் கடின உடலுழைப்பும் இன்றி, வெறும் ‘முகத்தை’ மட்டுமே வாடகைக்கு விட்டு சீன மக்கள் லட்சங்களில் பணத்தை அள்ளி வருகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற அச்சம் உலகளவில் நிலவி வரும் நிலையில், அதே ஏஐ தொழில்நுட்பமானது மனிதர்களின் தோற்றத்தையே மூலதனமாக மாற்றி புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

சீனாவில் ‘குறுநாடக புரட்சி’

சீனாவில் தற்போது உருவாகியுள்ள குறுநாடக புரட்சி (Micro-drama Boom) மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில், மனித நடிகர்களுக்குப் பதிலாக ஏஐ முகங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த முகங்கள் அனைத்தும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் வாடகை முகங்கள்தான். சீனாவில் இப்போது இந்த ‘செயற்கை நுண்ணறிவு முக வாடகை’ (AI Face Renting) தொழில்தான் மாபெரும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

டிக் டாக் (TikTok), வி-சாட் (WeChat) போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ‘ஒரு நிமிட நாடகங்கள்’ மிகப் பெரிய சந்தையை உருவாக்கியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் வெளியான 1.28 லட்சம் குறுநாடகங்களில் 95% நாடகங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் கதை மட்டும் எழுதினால் போதுமானது. நடிப்பதற்கு நேரில் நடிகர்கள் தேவையில்லாமல் ஏஐ மூலமே கதாபாத்திரங்களை நடிக்க வைக்கிறார்கள். இதனால் திரைப்படத் தயாரிப்புச் செலவு 80% வரை குறைகிறது. அதேபோல, 3 மாதங்கள் வரை ஆகக்கூடிய தயாரிப்பு நேரமும் வெறும் 1 மணிநேரமாகக் குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக நடிகர்கள், மாடல்கள், ஒப்பனைக் கலைஞர்களின் தேவை குறைந்து, சாமானிய மக்களின் முகங்களைப் பெற்றுப் பயன்படுத்தும் ஒரு புதிய சந்தை உருவாகியுள்ளது.

முகத்தை வாடகைக்கு விடுவது எப்படி?

கேமரா முன்னால் நேரில் நிற்காமலே வருமானம் ஈட்டும் இந்த புதிய நுட்பம் ‘டிஜிட்டல் லைக்னஸ் லைசென்சிங்’ (Digital Likeness Licensing) என அழைக்கப்படுகிறது.

சீனாவில் உள்ள ‘ஆக்ட்-ஐடி’ (ActID), நியூ கிளா (New Claw), யுவான்ஸியாங் (Yuanxiang) போன்ற தளங்களில் மக்கள் தங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றிச் சான்றிதழ் பெறுகின்றனர். சான்றிதழ் பெற்றவர்கள், தங்கள் முகத்தைக் குறும்படங்கள், விளம்பரங்கள் மற்றும் வீடியோ கேம்களுக்கு வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம்.

ஒரு நபரின் முகத்தை வெவ்வேறு கோணங்களில் உயர்தர புகைப்படங்களாகப் பதிவேற்றும்போது, ஏஐ தொழில்நுட்பம் அதை 3டி டிஜிட்டல் அவதாரமாக மாற்றி தனது பட்டியலில் சேர்க்கிறது. விளம்பரத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற முகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

ஒருவர் தனது வழக்கமான அலுவலகப் பணியில் ஈடுபட்டிருக்கும்போதோ அல்லது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும்போதோ, அவரின் ஏஐ முகம் சீன மொபைல் திரைகளில் ஒரு நாடகத்தில் நடித்துப் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும். ‘தோற்றத்தை’ மட்டுமே மூலதனமாக மாற்றும் ஒரு புதிய வருவாய் வாய்ப்புச் சந்தை சீனாவில் சக்கைபோடு போடுகிறது.

கட்டணமும் உரிமமும்

முகத்தின் வசீகரம், பிரபலம், பயன்பாட்டுக் காலம் மற்றும் ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப வாடகைத் தொகை மாறுபடும்.

 > எபிசோட் ஒன்றுக்கு 15 டாலர் முதல் 74 டாலர் வரை (சுமார் ரூ.1,200 - ரூ.6,000) கிடைக்கிறது.

> சாதாரண மக்கள் சில குறும்படங்களுக்கு முகத்தை வழங்கும்போது 300 முதல் 700 டாலர் வரை பெறுகின்றனர்.

> பிரத்யேகமான உலகளாவிய விளம்பரங்களுக்குச் சிலர் 15,000 டாலர் (சுமார் ரூ.12.5 லட்சம்) வரை கட்டணமாக ஈட்டுகின்றனர்.

தன் முகத்தை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே மக்கள் ஏஐ உரிமச் சான்றிதழைப் பெறுகின்றனர். ஆக்ட்-ஐடி நிறுவனத்தில் பதிவு செய்த 800 பயனர்களில் 300 பேர் உரிமம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆபத்துகள் என்னென்ன?

இந்தத் துறை மிக வேகமாக வளர்ந்தாலும், முகத் திருட்டு பிரச்சினையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிவதில்லை. மக்கள் தாங்கள் ஒப்புக்கொள்ளாத ஏஐ நாடகங்களில் தங்களின் முகம் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.

சமீபத்தில் பைட்டான்ஸின் ‘ஹாங்குவோ’ நிறுவனம் அனுமதியின்றி முகத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அங்கீகரிக்கப்படாத 85,000 வீடியோக்களை நீக்கியுள்ளது. சீன இணைய நீதிமன்றங்களும் இது தொடர்பாகச் சுமார் 700 வழக்குகளை விசாரித்துள்ளன.

ஒருமுறை முகத்தைக் கொடுத்துவிட்டால், அது எத்தகைய சூழலில் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

அனுமதியின்றி தவறான தகவல்கள், ஆபாச உள்ளடக்கங்கள் அல்லது குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.

சீனாவின் இந்த முக வாடகைத் தொழில், எளிய மனிதர்களுக்குக் கூடுதல் வருமானத்தை அளித்தாலும், தனிநபர் தனியுரிமை (Privacy) மற்றும் முக அடையாளத் திருட்டு தொடர்பான புதிய சவால்களையும் உலகுக்கு எச்சரிக்கையாக முன்வைக்கிறது.

முகத்தை வாடகைக்கு விட்டு லட்சங்களை ஈட்டும் சீனர்கள் - ஏஐ தரும் வாய்ப்பும் பின்புலமும்
மனித குலத்துக்கே ‘ஏஐ’ அச்சுறுத்தலா? - விவாதம் வலுப்பதன் பின்புலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in