சுட்டெரித்த சோதனையில் கிடைத்த ‘ஒளி’பரப்பு!

நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் சிறப்பு பகிர்வு.
சுட்டெரித்த சோதனையில் கிடைத்த ‘ஒளி’பரப்பு!
Updated on
2 min read

சோம்பேறித்தனமாக ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி தொலைக்காட்சியை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பவரை ஆங்கிலத்தில் ‘கவுச் பொட்டேடோ’ என்பர். உண்மையில், சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போன ஒருவரால் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டதுதான் தொலைக்காட்சிப் பெட்டி.

முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம் அது. போரில் பங்கேற்ற அத்தனை நாடுகளிலும் வீடுதோறும் ஒருவரேனும் போர்க்களத்துக்குச் சென்றாக வேண்டும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் லோகி பேர்ட் பலவீனமான நுரையீரல், நலிவுற்ற உடல்வாகு கொண்டவராக இருக்கவே போர்க் களம் அவரை நிராகரித்துவிட்டது.

அறிவியல் ஆராய்ச்சியிலும் அறிவியல் புனைவு வாசிப்பிலும் பேரார்வம் கொண்டிருந்த பேர்ட், இருந்த இடத்திலேயே வேறு மாதிரியான முயற்சியில் இறங்கினார். புகழ்பெற்ற நாவலாசிரியர் எச்.ஜி.வெல்ஸின் ஒரு சிறுகதையை வாசித்துவிட்டு, செயற்கை வைரக்கல் தயாரிக்க முயன்று தோல்வி அடைந்தார்.

சிறிது காலம் பிழைப்புக்குக் காலுறை, சோப்பு வியாபாரம் செய்தார். ஏற்கெனவே, 1850களில் தொலைக்காட்சியைக் கண்டறியும் முயற்சி வேறு சிலரால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அவை முழுமை பெறவில்லை. இங்கிலாந்தின் ஹேஸ்டிங்க்ஸ் நகரில் 1923இல் சொந்த ஆய்வுக்கூடத்தைக் குறைந்த செலவில் பேர்ட் நிறுவினார்.

அங்கு அதிவேகமாகச் சுழலும் தட்டு ஒன்றை இயந்திரத்தில் பொருத்தி, அதில் செறிவான ஒளியைப் பாய்ச்சி, காட்சிப் பிம்பங்களை ஸ்கேன் செய்தார். அவற்றிலிருந்து கிடைத்த சமிக்ஞை சலனப்படமாக உருமாறியது. மீண்டும் முயன்றபோது மின்சாரம் தாக்கியது. ஆய்வுக்கூடம் சேதமடைந்தது, நல்வாய்ப்பாக பேர்ட் உயிர் தப்பினார்.

அங்கிருந்து வெளியேறி லண்டன் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை ஆய்வுக்கூடமாக உருமாற்றினார்.

அட்டைத் தகடுகள், மிதிவண்டியில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள், விதவிதமான மின் விளக்குகள், பழைய பேட்டரிகள், மிகப்பழைய மோட்டார்கள் ஆகியவற்றால் நிரம்பிய அந்த ஆய்வுக்கூடம், தகிக்கும் வெப்பத்தை வெளியேற்றியது. ஆனாலும் விடாமல் இரண்டாண்டுகள் பலவிதமான சோதனைகளை மேற்கொண்டார்.

1925 அக்டோபர் 2 அன்று காலை தனது ஆய்வுக்கூடத்தை விட்டு வெளியே ஓடிவந்தார் பேர்ட். பிறகு கீழ்த் தளத்தில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்த இளம் ஊழியர் வில்லியம் டேன்டன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.

தனது ஆய்வுக்கூடத்துக்குள் தான் வடிவமைத்த ட்ரான்ஸ்மிட்டருக்கு முன்பாக உட்கார வைத்தார். அடுத்த சில நொடிகளில் முதன் முதலாக ஒரு மனித முகம் பேர்ட் கண்டறிந்த தொலைக்காட்சிப் பெட்டி வழியாக ஒளிபரப்பானது!

சுட்டெரித்த சோதனையில் கிடைத்த ‘ஒளி’பரப்பு!
Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in