

புதுடெல்லி: க்ரோக் ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் எக்ஸ் நிறுவனம் தனது பதில் அறிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: “பெண்கள் மற்றும் சிறார்களின் பாலியல் ரீதியான ஆபாசமான படங்களை உருவக்க க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு சாட்போட்டை பயனர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எக்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புதன்கிழமை மாலை 5 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், க்ரோக் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.