

பரவலாக பல உலக நாடுகளில் பேஸ்புக் சமூகவலைதளம் சேவை முடங்கியுள்ளதால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர், த்ரெட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு உலகம் முழுவதும் பயனர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென பேஸ்புக்கின் சேவை, இந்தியா உட்பட உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் முடங்கியது. துருக்கி, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.
ஆரம்பத்தில் பேஸ்புக் பயனர்களின் கணக்குகள் தானாகவே லாக் அவுட் ஆனதால் அவர்கள் மத்தியில் தத்தம் கணக்கு ஹேக் ஆனதோ என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆனால், “உங்கள் கணக்கு தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தற்காலிகமாக கிடைக்கப்பெறவில்லை. சற்று நேரத்தில் சரி செய்யப்படும்” (Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly.) என்ற தகவல் பேஸ்புக் திரையில் வந்து குழப்பத்தை நீக்கியது.
காரணம் என்ன? பேஸ்புக்கின் தகவல் மையங்கள் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சேவை முடங்கியதாகவும், இன்னும் சில நேரங்களில் சரிசெய்யப்படும் எனவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடங்கலுக்கு வருந்துகிறோம், மன்னிப்பும் கோரியுள்ளது.
மொபைலில் பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும், டெக்ஸ்டாப் பயன்படுத்தும் பயனர்களுக்கு சிக்கல் நிலவி வருவதாகவும் தெரிகிறது.
டவுன்டிடக்டர் என்ற தொழில்நுட்ப கோளாறுகளை ரியல் டைமில் அலசும் அமைப்பானது, பேஸ்புக் டெஸ்க்டாப் சேவைகள் 62%, மொபைல் இணைப்புகளில் 21%மும், ஆப் ரீதியில் 11 சதவீதமும் முடக்கம் நிலவுவதாக தெரிவித்துள்ளது.