டவர் இல்லாத இடத்திலும் நெட்வொர்க் - பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த புதிய சேட்டிலைட் போன்

டவர் இல்லாத இடத்திலும் நெட்வொர்க் - பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த புதிய சேட்டிலைட் போன்
Updated on
1 min read

புதுடெல்லி: மொபைல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களிலும் தடையற்றத் தொடர்பை வழங்கும் நோக்கில், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய சேட்டிலைட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,34,166 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சாதாரண ஸ்மார்ட்போன்கள் போலல்லாமல், இது செல்லுலார் நெட்வொர்க்குகளுக்குப் பதிலாக நேரடியாகச் செயற்கைக்கோள் மூலம் இயங்குவதால், சிக்னல் கிடைக்காத மிகத் தொலைதூர இடங்களிலும் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்: இன்மார்சாட் போன்ற உலகளாவிய செயற்கைக்கோள் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இணைந்து பிஎஸ்என்எல் இந்த கைபேசியை உருவாக்கியுள்ளது. இதில் அவசரக் காலங்களில் உதவி கோருவதற்கான SOS அவசர ஆதரவு, நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் கரடுமுரடான சூழலையும் தாங்கக்கூடிய கடினமான வடிவமைப்பு போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போன் பொதுமக்களுக்கானது அல்ல. மாறாக ராணுவம், கடல்சார் செயல்பாடுகள், பேரிடர் மீட்புக் குழுக்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்யும் சாகசப் பயணிகள் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சேட்டிலைட் போன்களின் பயன்பாடு மிகக் கடுமையான விதிகளுக்கு உட்பட்டது. எனவே, இந்த போனை வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பாக, மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து முறையான அங்கீகார அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். உரிய அனுமதியின்றி சேட்டிலைட் போனை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

இச்சேவை குறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதேவேளையில், பிஎஸ்என்எல் தனது வழக்கமான நெட்வொர்க்கை மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் இதுவரை சுமார் 99,000 4G மொபைல் தளங்களை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டவர் இல்லாத இடத்திலும் நெட்வொர்க் - பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த புதிய சேட்டிலைட் போன்
Moto G77 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in