40 சதவீத உணவகங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: ஸொமேட்டோ அறிக்கை

40 சதவீத உணவகங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: ஸொமேட்டோ அறிக்கை
Updated on
1 min read

ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு பெறும் சேவை தொடர்ந்து இயங்கி வரும் வேளையில் இந்திய அளவில் வெறும் 8-10 சதவீத உணவகங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருவதாக ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் நெருக்கடி காரணமாகத் தேசிய அளவில் ஊரடங்கு பல நிலைகளில் அமலில் உள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வியாபாரங்களில் ஒன்று உணவகங்கள். இந்த பாதிப்பு குறித்தும், கோவிட் நெருக்கடிக் காலம் முடிந்து என்ன நடக்கலாம் என்பது குறித்தும் ஸொமேட்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

83 சதவீத உணவகங்கள் திறக்கப்படாத நிலையில் 10 சதவீத உணவகங்கள் நிரந்தரமாக வியாபாரம் இழந்து மூடப்பட்டுள்ளன. மேலும் 30 சதவீத உணவகங்களுக்கு இந்த நிலை ஏற்படும் என்றும், சூழல் மாற மாற மீதமிருக்கும் 43 சதவீத உணவகங்கள் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றும் ஸொமேட்டோவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

நகரில் ஊரடங்கு இல்லையென்றாலும் கூட வாடிக்கையாளர்கள் அச்சம் காரணமாக வெளியே வராமல் இருப்பது, சந்தைகள் மூடப்பட்டுள்ளது இதனால் உணவகங்கள் திறக்கப்படாமல் இருப்பது ஆகியவை இந்தத் துறையில் பாதிப்புக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நகரங்களிலும் வெறும் 17 சதவீத (உட்கார்ந்து சாப்பிடும்) உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன என்றும், அதிலும் கூட்டம் வருவதில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. பல வாடிக்கையாளர்கள் வெளியில் சென்று சாப்பிடும் செலவை எதிர்காலத்தில் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சிலர் ஆன்லைன் மூலமே ஆர்டர் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கோவிட் பிரச்சினை முடிந்து சில மாதங்கள் வரை, வழக்கமாக தங்களுக்கு வரும் வியாபாரத்தில் பாதியிலும் குறைவாக மட்டுமே மீண்டும் வரும் என்று 60 சதவீத உணவக உரிமையாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதே நேரம் கோவிட் பிரச்சினைக்கு முன்னால் இருந்த அளவில், கிட்டத்தட்ட 75-80 சதவீத வியாபாரத்தை, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவு பெறும் சேவை, திரும்பப் பெற்றுள்ளது. அடுத்த 2-3 மாதங்களில் இந்த நிலை பழையபடி முழுவீச்சில் இருக்கும் என்று ஸொமேட்டோ மதிப்பிட்டுள்ளது.

மார்ச் 25-ம் தேதியிலிருந்து இதுவரை 7 கோடி ஆர்டர்களை தங்கள் தளம் மூலம் டெலிவர் செய்துள்ளதாக ஸொமேட்டொ தெரிவித்துள்ளது. ஐந்தில் ஒரு ஸொமேட்டோ வாடிக்கையாளர், நகரத்திலிருந்து சிறிய பகுதிகளுக்கு மாறிய பின் ஸொமேட்டோ செயலியை இயக்கியுள்ளார். இப்படி இடம் மாறியுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு வாடிக்கையாளர்கள், தங்களது புதிய இருப்பிடத்திலிருந்து உணவு ஆர்டர் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in