

கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். பணமில்லா பரிவர்த்தனைக்கான இந்த செயலியை (BHIM - Bharat Interface for Money) இந்திய தேசிய கொடுப்பனவுகள் காப்பரேஷன் உருவாக்கியுள்ளது. இது வங்கிகளின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் சேவைகளின் திரட்டியாக செயல்படும்.
ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறையானது (UPI) ஸ்மார்ட்ஃபோன் உதவியுடன் இரண்டு வங்கிக் கணக்குகளிடையே பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இந்த முறை, எந்த வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு வகையான வியாபரிகளுக்கு பணம் செலுத்த வழி செய்கிறது. இதற்கு கிரெடிட் கார்ட் தகவல்கள், IFSC விவரம், நெட் பாங்கிங் பாஸ்வேர்ட் என எதுவும் தேவைப்படாது.
இந்த செயலியை பயன்படுத்துவது குறித்த படிப்படியான வழிகாட்டி இதோ:
1. ஆண்ட்ரய்ட் பயனர்கள் இந்த செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். ‘BHIM’ என தேடினால் கிடைக்கும். இன்னும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த செயலி வடிவமைக்கப்படவில்லை.
2. செயலியை இன்ஸ்டால் செய்து உங்களுக்கான மொழியை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை குறுந்தகவல் வைத்து சரி பார்க்க வேண்டும். நெக்ஸ்ட் (Next) என்பதை அழுத்திவிட்டு குறுந்தகவல் வந்து சரிபார்க்கும் வரை காத்திருக்கவும்.
3. சரிபார்த்தல் முடிந்தவுடன் 4 இலக்க பாஸ்கோட் எண்ணை உள்ளிடவும்.
4. பாஸ்கோட் பதிவான பிறகு உங்களுடைய வங்கியை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணக் கொண்டு மற்ற விவரங்களை செயலியே தானாக தேடிக்கொள்ளும். உங்கள் அனைத்து பரிமாற்றங்களுக்கும் பயன்படும் பிரதான வங்கிக் கணக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
5. இந்த செயலில் 3 விருப்பங்கள் உள்ளன - (பணம்) அனுப்ப, கோர, ஸ்கான் செய்து செலுத்த. சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களுக்கிடையே மட்டுமே பணப்பரிமாற்றம் நடைபெறும்.
6. ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணையும், அவருக்கு அனுப்பவேண்டிய பணத்தையும் உள்ளிடவேண்டும். அடுத்து உங்களது எம்.பின் (MPIN) எண்ணை உள்ளிடவேண்டும். மொபைல் வழி பரிமாற்றத்தை அங்கீகரிக்கும் நாலு அல்லது ஆறு இலக்க எண் இது.
7. இதே போல ஒருவரது மொபைல் எண்ணைக் கொண்டு அவரிடம் பணமும் கோரலாம்.
8. மூன்றாவது விருப்பம் ஸ்கான் செய்து செலுத்துதல். இது குயிக் ரெஸ்பான்ஸ் எனப்படுகிற QR codeஐ பயன்படுத்தி பணம் பரிமாற்றும் முறை. ஒவ்வொரு மொபைல் எண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட QR கோட் இருக்கும். அது செயலியின் முகப்பில் ப்ரொஃபல் பக்கத்தில் இருக்கும்.
இவ்வாறாக இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.