

அழியாக் காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகாலை ஒளிப்படங்களில் நீங்கள் எத்தனையோ கோணங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் நிச்சயம், பிரபல ஒளிப்படக் கலைஞரான ஆலிவர் கர்ட்டீஸ் எடுத்த கோணத்தில் பார்த்திருக்க முடியாது.
தாஜ்மஹால் என்றில்லை, உலகின் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள் பலவற்றையும் அவர் படமெடுத்துள்ள கோணத்தில் பலரும் பார்த்திருக்கவே வாய்ப்பில்லை. சந்தேகம் எனில் அவரது இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம். ஆலிவர் கர்ட்டீஸ் போட்டோகிராபி எனும் அந்தத் தளத்தில், வோல்டே பேஸ் எனும் பகுதியில், அவர் மாறுபட்ட கோணத்தில் எடுத்துள்ள நினைவுச் சின்னங்களின் படங்களைப் பார்க்கலாம்.
ஆனால், ஒன்று; இந்தப் படங்களில் எல்லாம் நினைவுச் சின்னங்களைப் பார்க்க முடியாது. அவற்றில் எடுப்பட்ட காட்சியை மட்டும்தான் பார்க்க முடியும். ஏனெனில் கர்ட்டீஸ் இந்தப் படங்களை எல்லாம் நினைவுச் சின்னங்களின் மறு பக்கங்களிலிருந்து எடுத்திருக்கிறார். ஒருமுறை எகிப்தில் பிரமிடுகளைப் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அதன் எதிர் திசையில் அதுவரை பார்த்தறியாத அழகு மறைந்திருப்பதைப் பார்த்து அசந்துவிட்டாராம். அப்போதுதான் கர்ட்டீசுக்கு நினைவுச் சின்னங்களை வழக்கத்துக்கு மாறான கோணத்தில் படமெடுக்கும் யோசனை உதித்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, பல நினைவுச் சின்னங்களை இப்படிப் படமெடுத்துப் பதிவுசெய்திருக்கிறார்.
தாஜ்மஹால் இல்லாத தாஜ்மஹால் காட்சியும், சுதந்திர தேவி சிலை தெரியாத சுதந்திரதேவி காட்சியும் எத்தகைய அனுபவத்தைத் தருகிறது என அறிய அவரது தளத்துக்குச் சென்று பார்க்கவும்.