இன்ஸ்டா மறதி | சைபர் வெளி

இன்ஸ்டா மறதி | சைபர் வெளி
Updated on
3 min read

இன்ஸ்டா மறதி: பயனாளிகள் பற்றி இன்ஸ்டகிராம் அறிந்து வைத்திருப்பதை எல்லாம் மறந்துபோக வைக்கும் புதிய வசதியை மெட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. ‘ரெகமண்டேஷன் ரீசெட்’ எனும் இந்த வசதி மூலம், இன்ஸ்டகிராமின் அல்காரிதம் உங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துப் புதிதாகத் தொடங்கலாம்.

பயனாளிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இன்ஸ்டாவின் அல்காரிதம் அவர்களுக்கான உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் தொடரும் நிலையில், இந்த வசதி அறிமுகம் ஆகிறது. ஆனால் ஒன்று, மாற்றி அமைத்த பிறகு இன்ஸ்டா அல்காரிதம் மீண்டும் பயனாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை முன்னிறுத்தும். ஆக, இன்ஸ்டாவிலிருந்து முழு விடுதலை சாத்தியம் இல்லை.

பாஸ்வேர்டு எச்சரிக்கை: பாஸ்வேர்டு மேலாளர் சேவையை வழங்கிவரும் நார்ட்பாஸ் (NordPass) நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும், உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. 123123 போன்ற வழக்கமான பாஸ்வேர்டுகள் இதில் இடம்பெற்றுள்ளது அல்ல செய்தி, இத்தகைய எளிதில் மீறப்படக் கூடிய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதே நமக்கான செய்தி. - https://nordpass.com/most-common-passwords-list/

இனி எமோஜிகளில் பேசுவோம்! - திறன்பேசிகளில் புதியவற்றையும் புதுமையையும் பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஜப்பான் நிறுவனம் புதிதாக பேஜர் சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நவீன பேஜரில், எமோஜிகளில் மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். அதற்கேற்ப 1,100க்கும் மேற்பட்ட உருவ எழுத்துகளை (எமோஜி) கொண்டிருக்கிறது.

ஜப்பானிய சிறார்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த பேஜர் சாதனத்தில் அதிகபட்சம் நூறு நட்புகளையும் அரட்டைக் குழுவில் ஐந்து பங்கேற்பாளர்களையும் மட்டுமே கொண்டிருக்க முடியும். புதிய நண்பர்களை இணைக்க, நண்பர்கள் சாதனத்தோடு பேஜரை லேசாகத் தொட வேண்டும் என்பதால், நெருக்கமானவர்களை மட்டுமே நட்பு பட்டியலில் சேர்க்க முடியும்.

பயனாளிகள் விரும்பினால் தங்களுக்கான பிரத்யேக எமோஜிகளை உருவாக்கிக் கொள்ளலாம். செகா நிறுவனம் உருவாக்கியுள்ள எமோஜாம் (emojam) எனும் பெயரிலான இந்த பேஜர் டிசம்பரில் அறிமுகமாகிறது. நவீன எமோஜிகளின் தாய்வீடு ஜப்பான் என்பதால், அங்கிருந்து இப்படி ஒரு சாதனம் வருவதில் வியப்பில்லை. எமோஜி தொடர்பாக இன்னொரு சுவாரசியமான செய்தி: எக்ஸ் தளத்துக்கு மாற்றாகப் பிரபலமாகி வரும் புளுஸ்கை குறும்பதிவு சேவையில் எமோஜிகள் பயன்பாட்டை, தரவு காட்சியாக்கம் மூலம் இந்தத் தளம் எமோஜி மழையைப் பெய்ய வைக்கிறது: https://www.emojirain.lol/

சைபர் பாட்டி: இணைய மோசடிகளுக்கு எதிராக விழிப்புணர்வு தேவை என்பதோடு, ஏமாற்று காரர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையும் தேவை. அதே போலவே, விஷமிகளை அவர்கள் பாணியிலேயே வெறுப்பேற்றி பாடம் புகட்டும் வழிகளும் அவசியம். பிரிட்டனில் வர்ஜின் மீடியா தொலைத்தொடர்பு நிறுவனம், இணைய மோசடியாளர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் டெய்சி (Daisy AI) எனும் சைபர் பாட்டியை உருவாக்கியுள்ளது.

ஏஐ துணை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாட்டி, மோசடியாளர்கள் வலைவிரிக்க முயலும்போது, அவர்களிடம் அப்பாவிபோல கேள்விகள் கேட்டு, உரையாடலைத் தொடர்ந்து நேரத்தைக் கடத்தும் வகையில் செயல்படுவார். மோசடியாளர்களின் நேரத்தை வீணடிப்பது நல்ல உத்தியாகக் கருதப்படுகிறது. இதற்கெனப் பலவகை ஸ்கேம்பைட்டர்கள் (Scambaiter) உருவாக்கப்பட்டு வருகின்றன. சைபர் பாட்டி டெய்சியும் இந்த வகைதான்.

அஞ்சலில் வரும் ஆபத்து: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவற்றில் வரும் அறிமுகம் இல்லாத இணைப்புகளை ‘கிளிக்’ செய்ய வேண்டாம் எனத் தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது. இந்த இணைப்புகள் விஷமிகள் தளத்துக்குக் கொண்டு செல்லும் பிஷிங் மோசடியாக இருக்கலாம். இதே காரணத்தினால்தான், கியூஆர் கோடை ஸ்கேன் செய்யும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர்.

இப்போது, அஞ்சல் வாயிலாகவும் இத்தகைய மோசடியை இணைய விஷமிகள் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். அரசு துறையிடமிருந்து வரும் கடிதம் போன்ற தோற்றத்தை அளித்து, அதில் உள்ள கியூஆர் கோடை ‘கிளிக்’ செய்ய வைத்து, மோசடி தளத்துக்கு அழைத்துச் செல்கின்றனராம். சுவிட்சர்லாந்தில் இப்படித்தான், பருவநிலை தகவல் அளிக்கும் ‘AlertSwiss’ செயலி பற்றித் தகவல் அளிப்பதாகக் கூறி, அதே பெயரிலான போலி செயலிக்கு (Alertswiss) கொண்டுசெல்லும் கியூஆர் கோடைத் தபாலில் அனுப்பி வைத்துள்ளனர்.

- enarasimhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in