

திருச்சி: மணப்பாறை அருகே கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மின்கம்பத்தில் ஏறி தற்கொலை விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.தோப்புப்பட்டி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி கிராமம் ரெட்ட மலையில் தனியார் கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிரஷர் அமைத்தால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயம் பொய்த்து போகும் என்பதுடன், கால்நடை வளர்ப்பும் தடைபட்டு விடும் என்பதால் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் நடத்தினர்.
இதனால் கிரஷர் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மணப்பாறை தவெக எம்எல்ஏ ஆர்.கதிரவனை சந்தித்து கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கிரஷர் அமைக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த கோபி (எ) கோபால கிருஷ்ணன் (29) அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், கிரஷர் அமைத்தால் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து கிரஷர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த மக்கள் கோபால கிருஷ்ணனிடம் பேசி சமாதானம் செய்தனர். பின்னர் மின்கம்பத்தில் இருந்து அவர் கீழே இறங்கினார். கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்மபவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிராம மக்கள் சார்பாக கிரஷர் வேலையை நிறுத்தக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 1ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.