

சூர்யா, கைதான நடராஜ், பெஞ்சமின், ஆகாஷ்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெங்கல் பகுதியில் நண்பனை கொன்றதால் பழிக்குப் பழியாக இளைஞர் கொலை செய்தது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் என்கிற நவமணி. ரவுடியான இவர் மீது கும்மிடிப்பூண்டி சிப்காட், பொன்னேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆவடிடேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைப் பகுதிகளில், சந்தேகத்துக்கிடமான வகையில் மதுபோதையில் சுற்றிய நடராஜை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அவ்விசாரணையில் நடராஜ், ஆவடி அருகே உள்ள பொத்தூர் பகுதியில் வசித்து வந்த சூர்யா(20) என்ற இளைஞரை கடந்த 5-ம் தேதி நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் நடராஜை வெங்கல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வெங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து நடராஜை கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று சூர்யாவின் உடலைக்கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து,நடராஜின் நண்பர்கள்பெஞ்சமின்(20), ஆகாஷ்(25) ஆகியோரை நேற்று கைது செய்தனர். கைதான 3 பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: ஆவடி அருகே உள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நிலத்தரகர் சதீஷ்(38). ரவுடி நடராஜின் நெருங்கிய நண்பனான இவர், கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பரத்(20) என்ற இளைஞரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தன் நண்பன் சதீஷை கொலை செய்ததால், அதற்கு பழி தீர்க்கும் வகையில் பரத்தின் நெருங்கிய நண்பனான சூர்யாவை கொல்ல நடராஜ் திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 5-ம் தேதி நடராஜ், தனக்கு ஏற்கெனவே அறிமுகமான சூர்யாவை மது அருந்த வருமாறு ஊத்துக்கோட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று, தன் நண்பர்கள் பெஞ்சமின், ஆகாஷ் ஆகியோர் உதவியுடன் காக்கவாக்கம் பகுதியில் வெட்டி கொலை செய்து, வெங்கல் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் வீசியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.