வேலை வாய்ப்பை வலியுறுத்தி மதுரையில் ‘காக்ரோச்’ இயக்க இளைஞர்கள் பேரணி

வேலை வாய்ப்பை வலியுறுத்தி மதுரையில் ‘காக்ரோச்’ இயக்க இளைஞர்கள் பேரணி
Updated on
1 min read

மதுரை: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘காக்ரோச்’ என்ற இளைஞர்களின் இயக்க பேரணி மதுரையில் நடந்தது.

வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்த்து கரப்பான் பூச்சி (காக்ரோச் ) என்ற பெயரில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இயக்க பேரணி மதுரையில் இன்று நடந்தது. காந்தி மியூசியத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை இப்பேரணி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர். ஊழலை எதிர்த்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

‘காக்ரோச் ’ இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா பேசியது; சமீபத்தில் நீதிபதி ஒருவர், இளைஞர்கள் கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி போல தொந்தரவு செய்கின்றனர் என கருத்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வேலையின்மை, வாழ்வாதார சிக்கல்களில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள் தங்களை ‘கரப்பான் பூச்சி’ என அடையாளப்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் ஒன்றிணைகின்றனர். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு போன்றவை இளைஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டாக்கனியாக்கிறது. 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என, மத்திய அரசு உறுதியளித்தது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

வேலை வாய்ப்பை வலியுறுத்தி மதுரையில் ‘காக்ரோச்’ இயக்க இளைஞர்கள் பேரணி
“இயல்பாக சிரித்ததை தவறாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது” - அமைச்சர் கீர்த்தனா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in