

செல்ல நாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டனில் இருந்து வந்த இளைஞர் லோகேஷ்.
காஞ்சிபுரம்: வெளிநாட்டில் வசித்தால் பெற்றோரின் இறுதிச் சடங்கையே வீடியோ காலில் பார்க்கும் இந்தக் காலக்கட்டத்தில், தான் ஆசையாய் வளர்த்த செல்ல நாயின் மரணச் செய்தி கேட்டு காஞ்சிபுரம் இளைஞர் ஒருவர் கடல் தாண்டி லண்டனில் இருந்து விமானத்தில் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் பழனிராஜ் - ஞானசவுந்தரி தம்பதியினர். பழனிராஜ் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் மகன் லோகேஷ், முதுநிலை கணினி அறிவியல் படித்துவிட்டு லண்டனில் பணியாற்றி வருவதோடு அங்கேயே மேல்படிப்பும் படித்து வருகிறார்.
இவர்கள் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக `வீரூ' என்ற லெப்ரடார் வகை செல்ல நாயொன்றை வளர்த்து வந்தனர். அந்த நாயும் குடும்பத்தில் ஒருவராக அந்த வீட்டில் வளர்ந்து வந்தது. மேல்படிப்புக்காக லோகேஷ் லண்டன் சென்றுவிட்ட நிலையில், இவரது பெற்றோர் வீருவை கவனித்துக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வீரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அந்த நாய் இறந்துவிட்டது. இதுகுறித்து லண்டனில் உள்ள லோகேஷுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கேட்டவுடனேயே கதறி அழுத லோகேஷ் உடனடியாக லண்டனில் இருந்து காஞ்சிபுரம் புறப்படுவதாகத் தெரிவித்தார். விமானத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும், உடனடியாக டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தடைந்த அவர், உயிரிழந்த செல்ல நாயின் உடலைக் கண்டு கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். பின்னர் மனிதர்களுக்குச் செய்வது போன்றே அனைத்து இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டு வீரூவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ளவர்களின் ரத்த சொந்தங்கள் இறந்தாலே அங்கிருந்து வந்து அஞ்சலி செலுத்தத் தயங்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
ஆனால், இளைஞர் தான் வளர்த்த செல்ல நாய்க்காகப் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வெளிநாட்டிலிருந்து விரைந்து வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.