

சென்னை: திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கவும், சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பொது வசதி மையம் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்டர் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிட்கோ வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையத்தை உருவாக்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட கட்டமைப்பு வாய்ப்புகளைத் தயாரிக்கும் பணிகளுக்காக தகுதியான ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது.
எனவே, ஆர்வமுள்ள ஆலோசனை நிறுவனங்கள், tntenders.gov.in மற்றும் tidco.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான விளக்கங்களைப் பெறுவதற்கான டெண்டருக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் அக்.22-ம்தேதி மதியம் 3 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள டிட்கோ அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஆலோசனை நிறுவனங்கள் தங்கள் திட்ட முன்மொழிவுகளை நவ.12-ம் தேதி மாலை 3 மணிக்குள் tntenders.gov.in இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு பெறப்பட்ட தொழில்நுட்ப முன்மொழிவுகள் டிட்கோ அலுவலகத்தில் திறக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து சரக்குகளைக் கையாளும் வகையில் பல்முனை சரக்கு மையத்தை உருவாக்குவதற்கான பணிகளின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை நிறுவனம் தேர்வு நடைபெறுகிறது.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கான பொது வசதி மையம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தகுதியான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யவும் டிட்கோ அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான ஆவணங்களை tntenders.gov.in மற்றும் tidco.com ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான டெண்டருக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் அக்.23-ம் தேதி மதியம் 3 மணிக்கு எழும்பூரில் உள்ள டிட்கோ அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஆலோசனை நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை நவ.13-ம் தேதி மதியம் 3 மணிக்குள் tntenders.gov.in இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தொழில்நுட்ப முன்மொழிவுகள் எழும்பூரில் உள்ள டிட்கோ அலுவலகத்தில் திறக்கப்படும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.