“முன்புபோல் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா?” - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

“முன்புபோல் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா?” - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
Updated on
1 min read

சென்னை: “முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?” என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ இந்த திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஒட்டமொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண்.

100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முதல்வர் ஸ்டாலின். முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?’ எனத் தெரிவித்துள்ளார்

மேலும், அவர் அந்த எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ள தனது வீடியோவில், ‘2005 ல் 100 நாள் வேலைத் திட்டத்தை ஆரம்பித்தபோது மகாத்மா காந்தியின் பெயர் இல்லை. அவரின் பெயரை 2008 -09 தேர்தலின்போதே வைத்தனர். காந்தி மீது மிகப்பெரிய மரியாதை பிரதமர் மோடிக்கு உள்ளது. பொறுப்பேற்ற உடனே ஸ்வச் பாரத் திட்டத்துக்கு காந்தியின் பெயரை பிரதமர் மோடி வைத்தார்.

இப்போது திட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. 2005-ல் இத்திட்டம் வந்தபோது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 28% ஆகும். இப்போது நாட்டின் தீவிர வறுமை ஒரு சதவீதத்துக்கும் குறைவு. எனவே திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய திட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கை 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இப்போது மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் இத்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். மத்திய அரசு தனக்கு வரும் வருவாயில் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு செய்கிறது. யுபிஏ அரசைவிட நான்கு மடங்கு நிதியை எங்கள் அரசு வழங்குகிறது.

100 நாள் வேலைத் திட்டத்தால் செய்யப்படும் பணிகளால் மாநிலம் வளர்ச்சி பெறுகிறது. எனவே மாநில அரசு 40 சதவீதம் வழங்குவதில் என்ன தவறு. திட்டத்தின் தன்மை மாறுவதால் இப்போது ‘விக்ஸித் பாரத்’ அதாவது வளர்ந்த பாரதம் எனப் பெயரிட்டுள்ளார்கள், இதில் என்ன தவறு. இந்த பெயரை மகாத்மா காந்தியே பாராட்டுவார்கள். நாங்கள் பல திட்டங்களுக்கு காந்தியின் பெயரை வைத்துள்ளோம்.

இந்த புதிய திட்டத்தில் பயனாளிகள் வேலை கேட்டு 15 நாட்களுக்குள் வேலை கொடுக்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு பென்சன் கொடுக்கப்படும் என்ற வழிமுறையை கொண்டுவந்துள்ளார்கள். எனவே இத்திட்டம் மக்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்” என்று கூறினார்

“முன்புபோல் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா?” - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
ஆர்.கே.பேட்டை மாணவன் உயிரிழப்பு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in