ஆர்.கே.பேட்டை மாணவன் உயிரிழப்பு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

ஆர்.கே.பேட்டை மாணவன் உயிரிழப்பு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி ஆலுவலர் ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, மாணவ-மாணவியர் பள்ளி வளாகத்தில் சத்துணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

அவ்வாறு சத்துணவு அருந்திய மாணவர்களில், 7-ம் வகுப்பு மாணவனான, கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் மகன் மோகித்(11), பள்ளி நடைமேடை பகுதியில் சத்துணவு அருந்திக் கொண்டிருந்திருந்த போது, ஏற்கெனவே விரிசல் அடைந்த, 4 அடி உயர கைப்பிடிச் சுவர் இடிந்து, மோகித் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆர்.கே.பேட்டை போலீஸார், அலட்சியமாக செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், பள்ளி தலைமையாசியர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.1 கோடி மற்றும் அரசுப் பணி வழங்கக் கோரி, திருத்தணி அரசு மருத்துவமனையில் மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த, உறவினர்கள் மறுத்து வருவதால் திருத்தணி, ஆர்.கே.பேட்டை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.பேட்டை மாணவன் உயிரிழப்பு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
ஆர்.கே.பேட்டை அருகே அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in