

போராட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட தொழிலாளர்கள்.
சுங்குவார்சத்திரம்: சாம்சங் ஆலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவரும் நிலையில், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் சிஐடியு தொழிலாளர்கள் 27 பேரை சாம்சங் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட்ட, தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், பல மாதங்களைக் கடந்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களை சாம்சங் நிர்வாகம் பணியில் சேர்க்கவில்லை. இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சிஐடியு மாநில துணைச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்களது குடும்பத்தினருடன் சுங்குவார்சத்திரம் காந்தி சிலை பகுதியிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் புறப்பட்டனர்.
காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்ததையடுத்து, தடையை மீறி, குடும்பத்துடன் பேரணி புறப்பட்ட தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்டதால், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.